பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் உள்ள தனியார் பல்கலைக்கழகமான சண்டிகர் பல்கலைக்கழகத்தின் விடுதியில் தங்கி பயின்று வரும் சன்னி மேத்தா என்ற மாணவி, சக மாணவிகளை ஆட்சேபகரமாக வீடியோ எடுத்து, இமாச்சலப் பிரதேசம் சிம்லாவைச் சேர்ந்த ரன்கஜ் வர்மா என்ற நபருக்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது. அந்நபர் அந்த வீடியோக்களை இணையத்தில் பதிவேற்றியதாகக் கூறி கடந்த 17-ம் தேதி இரவு முதல் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

60-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் வெளியானதாகவும், இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயன்றதாகவும் தகவல் வெளியானது. ஆனால், இதனை மறுத்துள்ள காவல்துறையினர், மாணவி சன்னி மேத்தாவையும், அவரது நண்பரான ரன்கஜ் வர்மாவையும் கைது செய்துள்ளனர். எந்த ஒரு தற்கொலை முயற்சியும் நடைபெறவில்லை என மறுத்துள்ள காவல்துறையினர், ஒரு மாணவி மட்டும் மயங்கி விழுந்ததாகவும் தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் கூறியுள்ளனர்.


மேலும், சன்னி மேத்தா சக மாணவிகளை ஆட்சேபகரமான வீடியோ எடுத்ததாக வெளியான தகவலையும் காவல்துறையினர் மறுத்துள்ளனர். அம்மாணவி தனது தனிப்பட்ட வீடியோக்களை மட்டுமே பகிர்ந்ததாக, காவல்துறையினரும், பல்கலைக்கழக நிர்வாகமும் கூறியுள்ளது. மேலும், அம்மாணவியின் செல்போனைக் கைப்பற்றி விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர். 


மேலும் படிக்க | சக மாணவிகளை வீடியோ எடுத்து இணையத்தில் கசியவிட்ட மாணவி கைது


இந்தத் தகவலை மறுத்துள்ள மாணவர்கள், பல்கலைக்கழக நிர்வாகம் இவ்விவகாரத்தை மூடி மறைக்க முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளனர். தடயவியல் சோதனை இல்லாமலேயே, எந்த வீடியோவும் வெளியாகவில்லை என அதிகாரிகள் எவ்வாறு கூறுகிறார்கள் எனக் கேள்வி எழுப்பும் மாணவர்கள், சம்மந்தப்பட்ட மாணவியே வீடியோ எடுத்ததை ஒப்புக்கொண்டதாகவும் கூறியுள்ளனர். எந்தத் தவறும் நடைபெறவில்லை எனில், அம்மாணவி கைது செய்யப்பட்டது ஏன் எனவும் சண்டிகர் பல்கலைக்கழக மாணவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 


தொடர் போராட்டத்தின் காரணமாக பல்கலைக்கழகத்திற்கு வரும் 24-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பல்கலைக்கழக விடுதியின் 2 வார்டன்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டதோடு அனைத்து வார்டன்களும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை இரவில் இருந்து மாணவர்களின் போராட்டம் தொடர்ந்த நிலையில், உரிய விசாரணை நடத்தப்படுமென காவல்துறையினர் உறுதி அளித்ததைத் தொடர்ந்து, இன்று காலை மாணவர்கள் போராட்டத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டனர்.


இந்த விவகாரத்தை விசாரிக்க, 3 பெண் அதிகாரிகளைக் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு உரிய கவுன்சிலிங் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஒரு பெண்ணே சக மாணவிகளை ஆட்சேபகரமாக வீடியோ எடுத்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க | புடவையில் கால்பந்து விளையாடி அசத்திய எம்.பி. : இணையத்தைக் கலக்கும் புகைப்படங்கள்


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ