டெல்லியில் உள்ள திஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் நடைப்பெற்ற டெல்லி காவல்துறை மற்றும் வழக்கறிஞர்கள் இடையே வன்முறை மோதல் சம்பவம் குறித்து சிறப்பு விசாரணைக் குழு (SIT) விசாரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க குற்றப்பிரிவின் அதிகாரிகள் மற்றும் கூட்டு போலீஸ் கமிஷனர் (Jt. CP) தலைமையில் ஒரு SIT அமைக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நீதிமன்றத்தின் கட்டிடத்திற்குள் வாகனங்களை நிறுத்துவது தொடர்பாக ஒரு வழக்கறிஞருக்கும் சில காவலர்களுக்கும் இடையே ஒரு சிறிய வாக்குவாதத்தின் பின்னர் சனிக்கிழமை வன்முறை மோதல் வெடித்தது. இந்த மோதலில் கூடுதல் DCP உட்பட குறைந்தது 20 போலீசார் காயமடைந்தனர். மேலும் எட்டு வழக்கறிஞர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே பொலிசார் தங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர் வன்முறையை தாங்கள் நாடியதாக வழக்கறிஞர்கள் தரப்பில் தெரிவித்துள்ளனர், ஆனால் தங்களது தற்காப்புக்காகவே துப்பாக்கிச் சூடு நடத்தியதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்., "ஒரு கூடுதல் DCP மற்றும் 2 SHO-க்கள் உட்பட இருபது காவலர்கள் காயமடைந்துள்ளனர். எட்டு வழக்கறிஞர்களும் இந்த சம்பவத்தில் காயம் அடைந்துள்ளனர். தீ விபத்தில் 12 தனியார் மோட்டார் சைக்கிள்கள், 1 QRT ஜிப்சி மற்றும் காவல்துறையின் 8 சிறை வேன்கள் சேதமடைந்துள்ளன" என்று குறிப்பிட்டுள்ளார்.


இச்சம்பவம் தொடர்பாக., டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.என். படேல் சனிக்கிழமை மூத்த காவல்துறை அதிகாரிகளை சந்தித்து விவாதித்ததாக தெரிகிறது. இந்த கூட்டத்தில் டெல்லி உயர்நீதிமன்றத்தின் சில நீதிபதிகளும் கலந்து கொண்டனர், மேலும் அவர்கள் மூத்த காவல் அதிகாரிகளுடனும் இது குறித்து விவாதித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்த சம்பவம் குறித்து கலந்துரையாட நீதிபதி படேல் ஞாயிற்றுக்கிழமை டெல்லி போலீஸ் கமிஷனரை சந்திக்க உள்ளார் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்ற பார் அசோசியேஷனின் பிரதிநிதிகளும் முன்னதாக சனிக்கிழமை நீதிபதி படேலை சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.