டெல்லியின் மௌஜ்பூர் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டம் சார்பு பேரணி நடந்துகொண்டிருந்த இடத்தில் திடீர் கல் வீச்சு சம்பவம் நிகழ்ந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மௌஜ்பூர் யாஃபிராபாத் பகுதிக்கு அருகில் உள்ளது, அங்கு குடியுரிமை எதிர்ப்பு போராட்டமும் குடியுரிமை திருத்த சட்டம் சார்பு பேரணியும் ஒரே நேரத்தில் நடைப்பெற்றது.



இதனையடுத்து யாஃபிராபாத் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் கூடுதல் போலீஸ் படை நிறுத்தத்ப்பட்டது. எனினும் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் கல் வீச்சு சம்பவங்கள் அரங்கேறியது. இதனையடுத்து கிழக்கு மாவட்டம் உட்பட பிற பகுதிகளின் டி.சி.பிகளும் சம்பவயிடத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். மௌஜ்பூரின் நிலைமை தற்போது பதட்டமாக இருப்பதாகக் கூறப்படுவதால், துணை ராணுவப் படையினரும் அழைக்கப்பட்டுள்ளனர்.


அறிக்கைகளின்படி, சார்பு மற்றும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இடையிலான மோதல் கல் வீசப்படுவதற்கு வழிவகுத்துள்ளது.


நிலைமை கட்டுப்பாட்டை மீறி அதிகரித்ததால், சம்பவயிடத்தில் காவல்துறையினர் அதிகமாக குவிக்கப்பட்டனர். இதனிடையே பாஜகவின் சர்ச்சைக்குரிய தலைவர் கபில் மிஸ்ரா மற்றும் பலர் பிற்பகல் 3 மணியளவில் ஜாஃப்ராபாத் மெட்ரோ நிலையம் அருகே வந்து சாலையை காலி செய்யக் கோரியிருந்தனர்.


மாலை 4 மணியளவில், ஒரு தெருவில் இருந்து சிலர் வந்து கற்களை வீசத் தொடங்கினர்.


நிலைமை கட்டுக்குள் அடங்காமல் போக, காவல்துறையினர் தடியடி நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. என்றபோதிலும் காவல்துறையினரை காட்டிலும் போராட்டக்காரர்கள் அதிக அளவில் இருந்ததால் கலவரத்தை காவல்துறையினரால் கட்டுக்குள் கொண்டு வர இயலவில்லை.


பா.ஜ.க தலைவர் கபில் மிஸ்ரா, குடியுரிமை திருத்த சட்ட ஆதரவாளர்கள் தரப்பில் இருந்து கல் வீசப்படவில்லை என்று கூறியுள்ளார்.


முன்னதாக CRPF குழு மோதல் இடத்திற்கு வந்தது, அதன் பின்னர் காவல்துறையினர் கூட்டத்தைக் கட்டுப்படுத்த கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர். இந்த கல் வீச்சில் பல எதிர்ப்பாளர்கள் காயமடைந்துள்ளனர். சம்பவம் நடந்த இடத்திலிருந்து 'ஜெய் ஸ்ரீ ராம்' கோஷங்களும் கேட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


குடியுரிமை திருத்த எதிர்ப்பு போராட்டங்களால் ஷாஹீன் பாக்-கலிண்டி குஞ்ச்-சரிதா விஹார் சாலை, வஜிராபாத்-சந்த்பாக் சாலை மற்றும் மௌஜ்பூர்-ஜாஃப்ராபாத் சாலை தற்போது அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.