ஜம்முவில் பயங்கரவாதி தாக்குதல்: தீவிரமடையும் பாதுகாப்பு பணி!
ஜம்மு- காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதளில் இரண்டு இராணுவ வீரர் பலியை தொடர்ந்து சஞ்வான் பகுதிக்கு விமானப்படை விரைவு.
ஜம்முவின் புறநகர் பகுதியான சஞ்வான் பகுதியில் பல ஏக்கர் பரப்பளவுடன் கூடிய மிகப்பெரிய ராணுவ முகாம் உள்ளது. இந்த முகாமிற்குள் வீரர்களுக்கான தங்கும் இடம் பள்ளிகள் உள்ளிட்டவை அமைந்துள்ளன. இன்று அதிகாலை 4.45 மணியளவில் ராணுவ மையத்திற்குள் பயங்கரவாதிகள் சுற்றித்திரிவதை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த வீரர்கள் கண்டனர். திடீரென வீரர்களின் குடியிருப்பை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் ராணுவ வீரர் ஒருவர் பலியானார்.
தாக்குதல் நடந்த இடத்தை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தாக்குதல் தொடர்பாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜம்மு காஷ்மீர் டிஜிபி மற்றும் போலீஸ் சூப்பிரெண்டு ஆகியோருடன் போனில் பேசி நிலைமைகளை கேட்டறிந்தார். இது குறித்து விசாரணை நடத்த உள்துறை அமைச்சகத்திற்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டு உள்ளார்.
பயங்கரவாதிகள் தாக்குதலையடுத்து சஞ்வான் பகுதிக்கு விமானப்படை விரைந்து உள்ளது. சஞ்வான் இராணுவ முகாமில் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு உத்தம்பூர் பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இந்த தாக்குதலில் 3 தீவிரவாதிகள் ஈடுபட்டு உள்ளனர். ஜம்மு டிஜிபி எஸ்.எஸ்.சிங் ஜம்வால் கூறும்போது, இந்த தாக்குதலில் ஒரு ராணுவ வீரரும் அவரது மகளும் காயம் அடைந்து உள்ளனர் என தெரிவித்தார்.