சபரிமலைக்கு தனி சட்டம் இயற்ற கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
சபரிமலைக்கு பெண்கள் வருவது மற்றும் பாதுகாப்பு குறித்து விவகாரத்தில் சபரிமலைக்கு தனிச்சட்டம் உருவாக்க வேண்டும் என கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.
புது டெல்லி: சபரிமலை கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் அதன் நிர்வாகத்திற்கு பாதுகாப்பு நலனுக்காக குருவாயூர் கோவிலை போன்று, சபரிமலை கோவிலுக்கு ஏன் தனி சட்டம் இயற்ற கூடாது என கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், வரும் ஜனவரி 3 ஆம் தேதிக்குள் சபரிமலைக்கு தனி சட்டம் இயற்றுவது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு உள்ளது. அதாவது இன்றில் இருந்து பார்த்தால், இன்னும் 4 வாரங்களில் பதில் அளிக்க கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.
கடந்த ஆகஸ்ட் 27 ம் தேதி சபரிமலை கோயிலுக்கு புதிய சட்டத்தை உருவாக்க வேண்டும் என கேரள அரசு கேட்டுக் கொள்ளப்பட்டதாக உச்சநீதிமன்றம் கூறியது. ஆனால் அவர்கள் திருவிதாங்கூர் - கொச்சின் இந்து மத நிறுவனங்கள் சட்டத்தில் வரைவு திருத்தங்களை மட்டுமே செய்துள்ளனர்.
இது போதாது, சபரிமலை கோயிலின் நிர்வாகத்திற்கு புதிய, பிரத்யேக சட்டம் தேவை என்று நீதிபதி என் வி ராமண்ணா தலைமையிலான பெஞ்ச் தெரிவித்துள்ளது.
திருவாங்கூர் - கொச்சின் மத நிறுவனங்கள் சட்டம் 1/3 வது கோட்டாவில் மாநிலத்தின் திருத்தங்களின்படி கோயில் ஆலோசனைக் குழுக்களில் பெண்களுக்கான ஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் 7 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் மத நடைமுறைகள் குறித்த கேள்வியை இன்னும் ஆராயாத நிலையில், குழுவில் பெண்கள் இருக்க முடியும் என்பதை எவ்வாறு கூற முடியும் எனக் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறினார்கள்.
இதற்கு பதில் அளித்த கேரளா அரசு, 7 நீதிபதிகள் பெஞ்ச் தீர்ப்பில் தடையை திரும்பப் பெற வழிவகுத்தால், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களை கோயில் ஆலோசனைக் குழு அழைத்துச் செல்லும், நிர்வாகத்தில் பெண்களை ஈடுபடுத்துவது தாராளமய உந்துதலின் ஒரு பகுதியாகும் என்று கூறியது.
அனைத்து பெண்களையும் கோவிலுக்குள் நுழைய அனுமதித்து உச்சநீதிமன்றம் செப்டம்பர் 2018 அன்று வழங்கிய தீர்ப்பு இன்னும் நடைமுறையில் உள்ளது என்று பெஞ்ச் அரசுக்கு தெளிவுபடுத்தியது.
முன்னதாக, அனைத்து பெண்களையும் கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் 28 ஆம் தேதி, வயது வரம்பின்றி அனைத்து பெண்களும் சபரிமலை ஜயப்பன் கோவிலுக்கு செல்லலாம் என்ற பரபரப்பான தீர்ப்பை வழங்கியது. இந்த தீர்ப்பு குறிப்பிட்ட தரப்பினரிடையே வரவேற்பை பெற்றிருந்தாலும் பெருவாரியான மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்தனர்.
இந்த தீர்ப்பை எதிர்த்து ஐயப்ப பக்தர்கள் சார்பில் 65 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த 14 ஆம் தேதி 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தனிப்பட்ட நம்பிக்கை ஒருவரின் உரிமையை பறிக்கக்கூடாது என்றும், சபரிமலை மட்டுமின்றி வேறு கோயில்கள், மசூதிகளிலும் பெண்கள் செல்ல கட்டுப்பாடு உள்ளதாகவும், அனைத்து மதத்தினரும் அவர்களது மத நம்பிக்கையை கடைபிடிக்க உரிமை உள்ளது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
அதனைத்தொடர்ந்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உட்பட 3 நீதிபதிகள் வழக்கை பெரிய அமர்வுக்கு மாற்ற பரிந்துரைத்ததையடுத்து, அனைத்து பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவிக்கும் வழக்கை 7 பேர் கொண்ட அமர்வுக்கு மாற்ற அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.