அஜித் பவார் உள்ளிட்டோர் மீதான ஊழல் வழக்கில் தலையிட முடியாது என உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மஹாராஷ்டிர மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ்மூத்த தலைவருமான, அஜித் பவார் உள்ளிட்டோர் மீதான ஊழல் வழக்கில் விசாரணை நடத்த, மும்பை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தலையிட, உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.


மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பாஜக- சிவசேனா கூட்டணி அரசு அமைந்துள்ளது. 2007 - 2011 காலகட்டத்தில், இங்கே, மஹாராஷ்டிரா மாநில கூட்டுறவு வங்கியில் பல ஊழல்கள் நடைப்பெற்றதாக புகார்கள் எழுந்துள்ளன.


சர்க்கரை ஆலைகளுக்கு மிகவும் குறைந்த வட்டியில் கடன் அளிக்கப்பட்டது, கடனை செலுத்தாதவர்களின் சொத்துக்களை மிகவும் குறைந்த விலைக்கு விற்றது என, 1,000 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்ததாக புகார் எழுந்துள்ளன. இந்த காலகட்டத்தில், மஹாராஷ்டிரா துணை முதல்வராகவும், நிதி அமைச்சராகவும் இருந்தவர் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார்.


இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அஜித் பவார் உள்ளிட்டோரை, இந்த வழக்கில் சேர்க்கக் கோரி, சமூக ஆர்வலரான சுரிந்தர் அரோரா, மாநில காவல்துறையின் பொருளாதார குற்றப் பிரிவில் புகார் கொடுத்தார். எனினும் புகாரின் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. 


தனது புகாரின் மீது நடவடிக்கை எதும் எடுக்கப்படாததால், மும்பை உயர் நீதிமன்றத்தில், சுரிந்தர் அரோரா வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த, மும்பை உயர் நீதிமன்றம், அஜித் பவார் மற்றும் 70-க்கும் மேற்பட்டோர் மீது, முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து விசாரிக்க, சமீபத்தில் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 


இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அருண் மிஸ்ரா, எம்.ஆர்.ஷா அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, மும்பை உயர் நீதிமன்ற உத்தரவில் தலையிட விரும்பவில்லை என கூறியுள்ளது. 'மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது; அதனால், விசாரணை நடக்க வேண்டும்' எனவும், தன் உத்தரவில் அமர்வு குறிப்பிட்டுள்ளது.