ரிசர்வ் வங்கியின் உபரி பணத்தை அபகரிக்க முயன்றதாக நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு எதிராக, வழக்கு தொடுத்த வழக்கறிஞருக்கு ரூ.50,000 அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய ரிசர்வ் வங்கியிடம் ரூ.9.56 லட்சம் கோடி இருப்புத் தொகையாக உள்ளது. இதில் ரூ.3.6 லட்சம் கோடியை மத்திய அரசுக்கு வழங்குமாறு நிதியமைச்சகம் வலியுறுத்தியதாக அண்மையில் தகவல்கள் வெளியாகின. எனினும் இந்த தகவல்கள் பொய்யான தகவல் என்று மத்திய அரசு விளக்கம் அளித்தது.



இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் மனோகர் லால் சர்மா, வழக்கு தொடுத்தார். இந்திய ரிசர்வ் வங்கியின் பணத்தை அபகரித்து பெரும் நிறுவனங்களின் கடனை தள்ளுபடி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு ஜேட்லியும் உதவி வருகின்றார் என இந்த புகாரில் குறிப்பிட்டிருந்தார்.


அந்த மனு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி எஸ்.கே.கௌல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக பரிசீலனைக்கு வந்தது. பரிசீலனையின் போது “இந்த மனுவை பொதுநல வழக்காக ஏற்பதற்கான எந்தக் காரணத்தையும் கண்டறிய முடியவில்லை. நிதியமைச்சரை நாங்கள் கட்டுப்படுத்த வேண்டும் என மனுதாரர் விரும்புகிறார். மனுதாரர் சில நல்ல விஷயங்களை செய்திருக்கின்றார், ஆனால் இந்த வழக்கின் மூலம் தன் மீதான நம்பகத்தன்மையை ஏன் குறைத்துக் கொள்கிறார்?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.


மேலும், வழக்கறிஞர் சர்மாவுக்கு ரூ.50,000 அபராதம் விதித்ததுடன், அந்தத் தொகையை செலுத்தும் வரையில் அவர் சார்பிலான எந்தவொரு பொதுநல மனுவையும் பெறக்கூடாது எனவும் உச்சநீதிமன்றப் பதிவாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.