கட்செவி அஞ்சல் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் வேவு பார்க்கப்பட்டதாக வந்த தகவலையடுத்து எதிர்க்கட்சித் தலைவர்கள் குடியரசுத் தலைவரிடம் புகார் அளிக்க திட்டம்..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்களின் கட்செவி அஞ்சல் (Whatsapp) தளங்கள் இஸ்ரேல் நாட்டின் பெகசஸ் என்ற மென்பொருள் மூலம் வேவு பார்க்கப்பட்டதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. 2018 ஜனவரி முதல் 2019 மே வரை இஸ்ரேலிய நிறுவனம் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் மக்களை உளவு பார்த்ததாக தெரியவந்துள்ளது. இது குறித்து வாட்ஸ்ஆப் நிர்வாகத்திடம் மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளது.


இதற்கிடையில், நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் தலைமையில் 13 எதிர்கட்சிகளின் தலைவர்கள் சந்தித்துப் பேசினர். கட்செவி அஞ்சலை வேவு பார்த்தது தொடர்பாக குடியரசுத் தலைவரைச் சந்தித்து புகாரளிக்கவும், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் பிரச்சினையை எழுப்பவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். 


இது குறித்து குலாம்நபி ஆசாத் கூறுகையில்; கட்செவி அஞ்சல் விவகாரம் தொடர்பாக அனைவரும் இணைந்து ஒரு போராட்டம் டில்லியில் நடத்த வேண்டும். மேலும் ஜனாதிபதியை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். இவரிடம் மகஜர் வழங்கப்படும். மேலும் உச்சநீதிமன்றம் கண்காணிப்பில் சிறப்பு விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்த உள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.