தனக்கு ஒதுக்கப்பட அரசு பங்களாவை காலி செய்த சுஷ்மா ஸ்வராஜ்..!
டெல்லியில் தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த அரசு பங்களாவை முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் காலி செய்துள்ளார்!!
டெல்லியில் தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த அரசு பங்களாவை முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் காலி செய்துள்ளார்!!
பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுஷ்மா சுவராஜ், டெல்லி முதல்வராகவும், வாஜ்பாய் அமைச்சரவையில் ஒருவராகவும் பதவி வகித்தவர். பிரதமர் மோடி அமைச்சரவையில் வெளியுறவுத் துறை அமைச்சராக இடம்பெற்றிருந்தார். தனது செயல்பாடுகளால், மோடியையும் விஞ்சும் அளவுக்கு சர்வதேச அளவில் புகழ் பெற்றிருந்தார்.
கடந்த ஆண்டில் சிறுநீரகப் பிரச்னை காரணமாக உடல்நலம் குன்றியிருந்த சுஷ்மா சுவராஜ், சிகிச்சைக்குப் பின் பூரண குணமடைந்தார். ஆனாலும், நாடாளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று அவர் திடீரென அறிவித்தார். அவருக்கு பா.ஜ.க. மேலிடம் சீட் தர விரும்பவில்லை என்பதை மூத்த நிர்வாகிகள் மூலம் அறிந்த பின்பே அப்படி அவர் அறிவித்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சனிக்கிழமை தனது உத்தியோகபூர்வ இல்லமான 8, புதுடில்லியில் உள்ள சஃப்தர்ஜங் லேனில் இருந்து வெளியேறியதாக அறிவித்தார். முந்தைய முகவரிகள் அல்லது தொலைபேசி எண்களில் இனி அணுக முடியாது என்றும் சுஷ்மா ஸ்வராஜ் கூறினார்.
இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில்; எனக்கு ஒதுக்கப்பட்ட 8, சப்தர்ஜங் லேண் அரசு இல்லத்தில் இருந்து நான் வெளியேறி விட்டேன். இந்த முகவரியில் மற்றும் பழைய தொலைபேசிகளில் என்னை இனிமேல் தொடர்பு கொள்ள முடியாது என்பதை தெரிவித்து கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, ஏராளமானோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தும், பாராட்டு தெரிவித்தும் வருகின்றனர்.