காவிரியில் 31.24 TMC தண்ணீர் திறக்க கர்நாடகா அரசுக்கு உத்தரவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட மத்திய சுற்றுச்சுழல் அமைச்சகத்திடம் கர்நாடக அரசு சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பித்திருக்கிறது. மேகதாது அணை கட்ட தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அதை பொருட்படுத்தாமல் புதிய அணை கட்டுவதில் கர்நாடக அரசு அடுத்தடுத்து நடவடிக்கை எடுத்து வருகிறது. 


இதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடும் எதிர்ப்பு தெரிவித்து, மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவிற்கு அனுமதி அளிக்ககூடாது என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதேபோல திமுக, பாமக, மதிமுக போன்ற கட்சிகளும் மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவிற்கு அனுமதி அளிக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


மேகதாது அணை விவகாரத்தில் தமிழகம் மற்றும் கர்நாடக இடையே ஏற்பட்டுள்ள பரபரப்பான சூழலில், இன்று டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் தலைவர் மசூத் உசேன் தலைமையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் நான்காவது கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது.  இதில்  ஜூலை மாதத்திற்கு 31.24 TMC தண்ணீர் காவிரியில் திறந்துவிட கார்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியது. 


மேலும், கடந்த மாதத்திற்குரிய  9.19 TMC தண்ணீரும் இதுவரை திறந்துவிடப்படவில்லை என்பதால், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கமுடியவில்லை எனவும், இதன் காரணமாக குறுவை சாகுபடி விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளது.


எனவே ஜூன், ஜூலை மாதத்திற்குரிய நீரை கர்நாடகா அரசு திறந்துவிட வேண்டும் எனவும் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. கூட்டத்தில் மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவது தொடர்பாக விவாதம் மேற்கொள்ள தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. 


மேலும, காவிரி நீர் முறைப்படுத்தும்  குழுவின் தலைமையிடம் பெங்களூர் என இருக்கும்பட்சத்தில், கூட்டத்தை இனி பெங்களூரிலே நடத்த வேண்டும் என்று  தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.