ஆகஸ்ட் 8 ம் தேதி குஜராத்தில் காலியாக உள்ள 3 ராஜ்யசபா எம்.பி., பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் 6 காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் பதவி விலகியதால், மற்றவர்கள் அணி மாறாமல் இருக்க, எம்.எல்.ஏ.,க்கள் அனைவரையும் பெங்களூரு அருகே உள்ள ரிசார்ட் ஒன்றில் தங்க வைத்துள்ளனர்.


இது தொடர்பாக பல சர்ச்சைகள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், எம்.எல்.ஏ.,க்கள் தங்க வைக்கப்பட்டுள்ள ரிசார்ட்டில் இன்று காலை 7 மணி முதல் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். 


ராஜ்யசபா தேர்தலில் பாஜக-வுக்கு அணி மாறி ஓட்டளிக்க காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களுக்கு தலா ரூ.15 கோடி வரை பேரம் பேசப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து இந்த சோதனை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.


எம்.எல்.ஏ.,க்கள் தங்க வைக்கப்பட்டுள்ள ஈகிள்டன் ரிசார்ட் மட்டுமின்றி, எம்.எல்.ஏ.,க்கள் தங்க வைக்கப்படுவதற்கு ஏற்பாடுகள் செய்து தந்த கர்நாடக மின்துறை அமைச்சர் ஷிவகுமாரின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். ஷிவகுமாரின் சகோதரரும் எம்.பி.,யுமான சுரேஷ் என்பவரின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.