ஒப்பந்த செவிலியர்களின் ஊதியம் உயர்த்தப்படும்: தமிழக அரசு உறுதி!
ஒப்பந்த செவிலியருக்கான சம்பளத்தை ரூ.7000-லிருந்து ரூ.14 ஆயிரமாக உயர்த்தி வழங்க தமிழக அரசு உறுதி தெரிவித்துள்ளது!
அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த செவிலியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி செவிலியர்கள் சார்பில் ஜெயப்பிரகாஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், ஒப்பந்த செவிலியர்களுக்கு வழங்கப்படும் இந்த குறைந்தபட்ச ஊதியத்தையும் குறிப்பிட்ட தேதியில் வழங்காமல், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படுவதாக செவிலியர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் ஒப்பந்த செவிலியர்கள் முழுமனதுடன் தங்களது பணிகளில் ஈடுபடவில்லை. எனவே, ஒப்பந்த செவிலியர்களின் ஊதியத்தை குறிப்பிட்ட தேதியில் வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். தற்போது உள்ள ரூ.7000 ஊதியத்தை ரூ.22,000 ஆக உயர்த்த வேண்டும் என கோரியிருந்தார்.
இதனையடுத்து, இந்த மனு தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி மற்றும் நீதிபதி அப்துல்குத்தூஸ் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
இந்நிலையில், இதன் வழக்கு விசாரணை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையில் அரசு மருத்துவமனை ஒப்பந்த செவிலியருக்கான சம்பளத்தை ரூ.7000லிருந்து ரூ.14 ஆயிரமாக உயர்த்தி 15 நாட்களுக்குள் அரசாணை வெளியிடப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதியளித்துள்ளது.
மேலும், செவிலியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பான வழக்கில் கோரிக்கை குறித்து 6 மாதத்தில் பரிசீலித்து முடிவெடுக்க சுகாதார செயலர் தலைமையிலான குழுவுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.