பரோல் முடிய 3 நாட்கள் உள்ள நிலையில் சிறைக்கு சென்றார் சசிகலா!
கணவர் நடராசன் மறைவுக்காக 15 நாள்கள் பரோலில் வெளிவந்த சசிகலா, 30-ம் தேதியுடன் பரோலை முடித்துக்கொண்டு இன்று 31-ம் தேதி மீண்டும் சிறைக்கு திரும்புகிறார்!
சசிகலா கணவர் நடராஜன் மறைவு காரணமாக அவரின் இறுதி சடங்கிற்கு கடந்த 20-ம் தேதி சசிகலா பரோலில் சிறையில் இருந்து வெளியே வந்தார்.
இறுதிச் சடங்குகள் முடிந்துவிட்டு தஞ்சையிலேயே கணவர் நடராசன் இல்லத்தில் தங்கியிருந்த அவர், கடந்த 10 நாட்களாக வீட்டுச் சிறையில் இருப்பது போல் இருந்து வந்தார். விதிமுறைகள் காரணமாக 30-ம் தேதி நடைபெற்ற கணவர் நடராசனின் படத்திறப்பு விழாவில் கலந்துகொள்ளாமல் வீட்டிலேயே முடங்கியிருந்தார்.
இந்த நிலையில்தான் ``ஆறு மாதத்துக்குள்ளாக இரண்டு முறை பரோல் பெற்றுவிட்டதால் கூடுதலாக ஒருமாதம் சிறை வாசம் அனுபவிக்க வேண்டும்'' எனச் சிறைக் கண்காணிப்பாளர் சோமசேகரன் தெரிவித்துள்ளார்.
இந்தச் சட்ட சிக்கலை வழக்கறிஞர்களுடன் ஆலோசனை செய்த சசிகலா 15 நாள் பரோலை 10 நாள்களில் முடித்துக்கொள்ள முடிவெடுத்துள்ளார். இதனால் தனது 15 நாள்கள் பரோலை 10 நாள்களாகக் குறைத்துக்கொண்டு மீண்டும் இன்று 31-ம் தேதி காலை 8 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பும் சசிகலா மாலை 4 மணிக்குள் சிறைக்குத் திரும்ப முடிவெடுத்துள்ளார்.
பரோல் முடிய 3 நாட்கள் உள்ள நிலையில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைக்கு இன்றே புறப்பட்டார். தனது 15 நாள்கள் பரோல் நாள்களில் பயண நேரத்தைக் கணக்கில் கொள்ளாததால் சசிகலாவின் பரோல் 10 நாள்களாகக் குறைகின்றது. எனவே, 5 நாள்களுக்கு முன்னதாகவே சிறைவாசத்துக்குத் திரும்புவதால் சிறை நன்னடத்தை விதிகளின்படி நன்னடத்தை சான்று கிடைத்துவிடுகின்றது. இது 4 வருடச் சிறை வாசத்திலிருந்து விடுபடும்போது பயன்படும் என்கின்றனர் சசிகலா தரப்பினர்.