இலங்கை குண்டுவெடிப்பில் 3 இந்தியர்கள் பலி -சுஷ்மா ஸ்வராஜ்!
இலங்கை குண்டுவெடிப்பில் 3 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்!
இலங்கை குண்டுவெடிப்பில் 3 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்!
இதுதொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,.. இலங்கையில் 8 இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 3 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். உயரிழந்தவர்களில் பெயர்கள் லக்ஷ்மி, நாராயண் சந்திரசேகர், ரமேஷ் ஆகியோர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இலங்கை குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட இந்தியர்கள் கொழும்புவில் உள்ள தூதரகத்தை அணுகலாம் என்றும், இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளதாகவும் அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் குறிப்பிட்டுள்ளார். மேலும், தேவைப்பட்டால் மருத்துவக்குழுக்களையும் அனுப்ப தயாராக இருப்பதாக இலங்கை அமைச்சரிடம் அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உறுதி அளித்துள்ளார்.
கிறிஸ்தவர்களின் புனித திருவிழாவான ஈஸ்டர் பண்டிகை இன்று உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு இலங்கையில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்தவ மக்கள் பலர் இறைவழிபாட்டில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், கொழும்பு நகரிலுள்ள 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் 3 ஓட்டல்கள் ஆகியவற்றில் இன்று காலை திடீரென குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடந்தன. இந்த சம்பவத்தில் 207-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனர். 450-க்கும் அதிகமானோா் காயமடைந்து உள்ளனர்.
இதில், கொழும்புவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயம், கடலோர நகரான நெகோம்போவில் உள்ள புனித செபாஸ்டியான் ஆலயம் மற்றும் பட்டிகலோவாவில் உள்ள ஆலயம் என 3 கிறிஸ்தவ ஆலயங்கள் சேதமடைந்துள்ளன. அதேபோன்று ஷாங்கிரிலா, தி சின்னமோன் கிராண்ட் மற்றும் கிங்ஸ்பரி ஆகிய 3 ஓட்டல்களிலும் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. மேலும் 2 இடங்களில் பிற்பகலில் குண்டுகள் வெடிப்பு நிகழ்ந்தது.