இனி மாநில மொழிகளிலேயே ரயில் டிக்கெட் பெறலாம்!!
மாநில மொழிகளில் ரெயில் டிக்கெட் வழங்கப்படும் என ரெயில்வே பயணிகள் வசதிக்குழு தலைவர் தகவல்.
தென் மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகளில் ரெயில் டிக்கெட் வழங்கப்படும் என்று ரெயில்வே பயணிகள் வசதிக்குழு தலைவர் எச்.ராஜா தெரிவித்தார்.
டெல்லியில் ரெயில் நிலையங்களை நேற்று ஆய்வு செய்த ரெயில்வே பயணிகள் வசதிக்குழு தலைவரும், பா.ஜ.க. தேசிய செயலாளருமான எச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-
ரெயில்வே பயணிகள் வசதிக்குழு கடந்த 2 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் 8,500 ரெயில் நிலையங்கள் உள்ளன. 2 ஆண்டுகளில் 366 ரெயில் நிலையங்களில் ஆய்வு நடத்தி உள்ளோம். ரெயில் நிலைய குறைகளை நாங்கள் கண்டுபிடித்து சொல்வதால் அது சரி செய்யப்படுகிறது.
இந்த ஆய்வுக்கு முன்னதாக ரெயில்வே துறை மந்திரியை சந்தித்து பேசினோம். அப்போது, தென் மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகளிலேயே டிக்கெட் அச்சிடப்பட வேண்டும் என்றோம். உடனே அவர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு இதை அமல்படுத்த கேட்டுக்கொண்டார். இது பாராட்டத்தக்க விஷயம் ஆகும்.
சட்டசபையில் ஜெயலலிதா படம் திறக்கப்பட்டதை அரசியல் ஆக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் முதல்-அமைச்சராக இருந்ததால் வைத்திருக்கிறார்கள். காவி என்பது தேசியக்கொடியில் இருக்கிறது.
அது தியாகத்தையும், சேவையையும் குறிக்கக்கூடியது.வன்னியகுல சத்திரியர்களின் குலதெய்வமான திரவுபதி அம்மனை இழிவாக பேசிய பழ.கருப்பையா, ராஜராஜசோழனை இழிவாக பேசிய கி.வீரமணி ஆகியோரை வன்மையாக கண்டிக்கிறேன். இவர்கள் அனைவரும் தமிழ் மக்களின் எதிரிகள். எனவே, இவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என அவர் கூறினார்.