எதிர்க்கட்சிகள் தொடர் அமளியால் நாடாளுமன்ற மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முத்தலாக் தடைச் சட்ட மசோதா மாநிலங்களவையில் இன்று விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மசோதாவிற்கு எதிர்ப்புத் தெரிவிக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.


மூன்று முறை தலாக் சொல்லி மனைவியை விவாகரத்து செய்யும் நடைமுறையை மேற்கொள்ளும் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஆணுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டமசோதா, கடந்த 17 ஆம் தேதி அன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. வியாழக்கிழமை அன்று மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 245 பேர் மசோதாவுக்கு ஆதரவாகவும், 11 பேர் எதிராகவும் வாக்களித்தனர். இதனால் மக்களவையில் மசோதா நிறைவேறியது.


இந்த நிலையில்,மாநிலங்களவையில் இந்த மசோதா இன்று தாக்கல் செய்யப்படுகிறது. பா.ஜ.க.வுக்கு உறுப்பினர் எண்ணிக்கை குறைவாகவே உள்ளதால், மசோதா நிறைவேற எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு அவசியம். முத்தலாக் தடை மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வலியுறுத்தி, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.


மாநிலங்களவையில் மேகதாது விவகாரத்தை எழுப்பி தமிழக எம்.பி.க்களும், ரஃபேல் விவகாரத்தை எழுப்பி காங்கிரஸ் எம்.பி.க்களும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.


பின்னர் அவை மீண்டும் கூடியபோது, முத்தலாக் தடை மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்பி ஆய்வுசெய்த பிறகே நிறைவேற்ற வேண்டும் என காங்கிரஸ், திரிணமூல் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தின. இதை அரசு தரப்பு ஏற்காத நிலையில், அமளி ஏற்பட்டதால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.


ஒரே நேரத்தில் உடனடியாக மூன்று முறை தலாக் சொல்லி மனைவியை விவாகரத்து செய்யும் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஆணுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவை மாநிலங்களவையிலும் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டிருந்த நிலையில், அதற்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.