நீண்ட நேர விவாதத்திற்குப் பின்னர் மக்களவையில் முத்தலாக் மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முஸ்லிம் மதத்தினரிடையே மனைவியை கணவர் திடீரென்று விவாகரத்து செய்ய, முத்தலாக் முறையை பின்பற்றி வருகின்றனர். இந்த முறைமை தண்டனைக்குரிய குற்றமாக கருதும் முத்தலாக் சட்ட மசோதாவை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.


முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு மசோதா என்ற பெயரில் கடந்த பாராளுமன்ற கூட்டத் தொடரின்போது மக்களவையில் தாக்கல் இந்த மசோதா செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. ஆனால், மாநிலங்களவையில் இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கான பெரும்பான்மை பலம் பாஜக அரசுக்கு இல்லை என்பதலாலும், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பாலும் அங்கேயே முடங்கிவிட்டது.


இதன்காரணமாக அவசர சட்டம் மூலம் இந்த மசோதாவிற்கு உயிரூட்டும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டது. இதற்காக சில திருத்தங்கள் கொண்டுவந்து, குடியரசுதலைவர் ஒப்புதலுடன் கடந்த 19-9-2018 அன்று அவசர சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது. 


எனினும் குடியரசு தலைவரால் பிறப்பிக்கப்பட்ட எந்தவொரு அவசர சட்டமும் 6 மாத காலத்திற்குள் பாராளுமன்றத்தின் ஒப்புதலை பெற்று சட்டமாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பதால், தற்போது நடைபெற்று வரும் குளிர்கால கூட்டத் தொடரில் முத்தலாக் சட்ட மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சித்து வந்தது.


எனவே கடந்த வாரம் திங்கட்கிழமை மக்களவையில் முத்தலாக் மசோதா தாக்கல் செய்தது. இதனையடுத்து இந்த மசோதா மீதான விவாதம் இன்று நடைபெற்றது. விவாதத்தின்போது பெரும்பாலான கட்சிகள் இந்த மசோதாவை எதிர்த்தது. 


குறிப்பாக அதிமுக எம்பி அன்வர் ராஜா., முத்தலாக் மசோதா முஸ்லிம் தனிநபர் சட்டத்தில் நேரடியாக தலையிடுவதால், இந்த மசோதாவை நிறைவேற்ற கூடாது என வலியுறுத்தினார். மேலும் தற்போதைய வடிவில் இந்த மசோதாவை நிறைவேற்றக்கூடாது. இதில் சில திருத்தங்கள் செய்ய வேண்டும். எனவே, இந்த மசோதாவை பாராளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என தெரிவித்தார்.


இதேப்போல் காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் பல்வேறு திருத்தங்களை கொண்டு வர வற்புறுத்தின. ஆனால் மத்திய அரசு எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை நிராகரித்தது. இதனால் விவாதம் முடிந்தவுடன் குரல் வாக்கெடுப்பு நடத்துவதற்கான நடைமுறைகளை சபாநாயகர் மேற்கொண்டார். 



வாக்கெடுப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்தன.


குரல் வாக்கெடுப்பில் முத்தலாக் மசோதாவிற்கு ஆதரவாக 245 பேர் வாக்களித்தனர். 11 பேர் எதிர்த்து வாக்களித்தனர். இதனால் முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டது.