உன்னாவ் பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட பெண் சென்ற கார் விபத்துக்குள்ளான வழக்கை சிபிஐ-க்கு மாற்ற உத்திர பிரதேச மாநில அரசு பரிந்துரை செய்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னாவ் பகுதியில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூன் மாதம் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பாஜக  MLA குல்தீப் சிங் செங்கார் கைது செய்யப்பட்டார். இவ்விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இச்சம்வத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி சென்ற கார் நேற்று விபத்தில் சிக்கியது. ரேபரேலியில் நிகழ்ந்த இந்த கார் விபத்தில் சிறுமி படுகாயம் அடைந்தார். அவருடன் காரில் சென்ற அவரது தாய் மற்றும், சிறுமியின் வழக்கறிஞர் பலியாகினர்.


இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே இந்த விபத்திற்கு காரணம் பாஜக  MLA குல்தீப் சிங் செங்கார் தான் என முக்கிய தலைவர்கள் பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்திற்கு எதிராக தங்களது கண்டனங்களையும் பதிவு செய்து வருகின்றனர்.


உத்திர பிரதேச மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதற்கிடையே, MLA குல்தீப் சிங் செங்கார், அவரது சகோதரர் உள்பட 10 மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.


இந்நிலையில், பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட பெண் சென்ற கார் விபத்துக்குள்ளான வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்திர பிரதேச அரசு பரிந்துரை செய்துள்ளது என அம்மாநில உள்துறை முதன்மை செயலாளர் தெரிவித்துள்ளார்.


முன்னதாக கடந்தாண்டு, தனக்கு நியாம் வேண்டி தனது தந்தையுடன் முதல்வர் யோகி ஆதித்யநாத் வீட்டின் முன் போராட்டம் செய்த இச்சிறுமி மற்றும் அவரது தந்தை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். காவல்துறை பிடியில் இருக்கும்போது சிறுமியின் தந்தை உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.