உ.பி,யில் கனமழைக்கு 13 பேர் பலி
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெய்து வரும் கனமழைக்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 13 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து உள்துறை அமைச்சகத்தின் அதிகாரி கூறும்போது, "உத்தரப் பிரதேசத்தின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சித்தாபூர், பரேலி, லக்னோ ஆகிய நகரங்கள் பெருமளவு பதிக்கப்பட்டுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கனமழைக்கு உத்தரப் பிரதேசத்தின் 13 பேர் உயிரிழந்தனர். பல கிராமங்களில் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் கரையோரம் வசித்த மக்கள் அரசின் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்" என்றார். மேலும், மாநிலத்தின் முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அடுத்த 48 மணி நேரத்துக்கு உத்தரப் பிரதேசத்தில் கனமழை நீடிக்கும் என உள்ளூர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.