உத்தரகாண்ட் கனமழை :30 பேர் உயிரிழப்பு
உத்தரகாண்ட் மாநிலத்தில் மேக-வெடிப்பு காரணமாக சமோலி மற்றும் பிதோராகார்க்கில் கனமழை பெய்து வருகிறது. கனமழையினால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மாநிலத்தில் 30 பேர் இதுவரை பலியாகி உள்ளனர் என்று தெரியவந்துள்ளது. கனமழை காரணமாக பல்வேறு கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது மேலும் மக்கள் பல்வேறு பகுதிகளில் வெள்ளத்தின் சிக்கி உள்ளனர். உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மற்றும் ஸ்ரீநகர் பகுதிகளில் அலக்நந்தா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
அவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் மற்றும் மாநில மீட்பு குழுவினர் ஈடுபட்டு உள்ளனர். ராணுவ வீரர்களும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். இடர்பாடுகளுக்குள் நடுவில் சிக்கிய உள்ள மக்களை மீட்பதற்கான பணியில் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். சிங்காலி, பாத்தாகோட், ஒங்லா மற்றும் தால் கிராமங்களில் மேக-வெடிப்பு கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது என்று பேரிடர் மேலாண்மை குழு தெரிவித்து உள்ளது.
அலக்நந்தா ஆற்றில் வெள்ளம் அபாய கட்டத்தை தாண்டி ஓடுகிறது. தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் அங்கு சென்று உள்ளனர் என்றும் மற்றொரு குழு தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது என்றும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறி உள்ளார்.