கர்நாடகா: ஜெயநகர் தொகுதியில் வாக்குப்பதிவு துவங்கியது!
கர்நாடகாவில் உள்ள ஜெயநகர் தொகுதி சட்டப்பேரவை தொகுதியில் வாக்குப்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது!
224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபை தேர்தல் கடந்த 12ம் தேதி நடைபெற்றது. 222 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றதில், அதிகபட்சமாக பாஜகவுக்கு 104 இடங்கள் கிடைத்தன. காங்கிரசுக்கு 78 இடங்களும், மஜதவுக்கு 37 இடங்களும் கிடைத்தன. தேர்தலுக்கு பிறகு 78 இடங்களில் வென்ற காங்கிரஸ், 38 தொகுதிகளில் வென்ற மஜத உடன் இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோரியதையடுத்து, ம.ஜ.க தலைவர் குமாரசாமி கடந்த மே 23-ம் தேதி அன்று முதல் மந்திரியாக பொறுப்பேற்றார். காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரான பரமேஸ்வராவுக்கு துணை முதல் மந்திரி பதவி அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அன்றைய தினம் பெங்களூரு ஜெயநகர் தொகுதியில் தேர்தல் நடைபெறவில்லை. அந்த தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருந்த விஜயகுமார் எம்.எல்.ஏ, கடந்த மாதம் 4ம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதையடுத்து, ஜெயநகர் தொகுதிக்கு ஜூன் மாதம் 11ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்நிலையில் இத்தொகுதிக்கான தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இதற்கான பிரசாரம் சனிக்கிழமை ஓய்ந்தது. இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சவுமியாரெட்டிக்கு ஆதரவாக மஜத தன்னுடைய வேட்பாளரை வாபஸ் பெற்றுள்ளது.
மரணம் அடைந்த பா.ஜ.க, வேட்பாளர் விஜயகுமார் தம்பி பிஎன் பிரகலாத் பா.ஜ.க, வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். மேலும் காங்கிரஸ் வெற்றி பெறும் பட்சத்தில் தன்னுடைய எண்ணிக்கையை 79 ஆக அதிகரிக்க முனைப்புடன் ஈடுபட்டுள்ளது.
இத்தொகுதியில் காங்கிரஸ், பா.ஜ.க, உட்பட 19 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தொகுதியில் ஆண் வாக்களர்கள் 1,02,668, பெண் வாக்காளர்கள் 2,03,184 மற்றும் மாற்றினத்தவர்கள் 16 பேர் வாக்களிக்க உள்ளனர்.
ஜெயநகர் தொகுதியில் ஓட்டுப்பதிவு நடைபெறுவதை முன்னிட்டு, அதற்கு தேவையான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. மேலும் ஓட்டுப்பதிவு அமைதியான முறையில் நடைபெற ஜெயநகர் தொகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் ஜெயநகர் தொகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும், இன்று நடைபெறும் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 13-ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் வெளியாகலாம் என்று தெரிகிறது.