ராஜீவ் காந்தியின் மரணம் படுகொலையா, விபத்தா? -வி.கே. சிங்!
புல்வாமா தாக்குதலை விபத்து என குறிப்பிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்குக்கு பதிலடி கொடுக்கும் வகையில் `ராஜீவ் காந்தியின் மரணம் படுகொலையா, விபத்தா?’ என மத்திய அமைச்சர் வி.கே. சிங் கேள்வியெழுப்பியுள்ளார்.
புல்வாமா தாக்குதலை விபத்து என குறிப்பிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்குக்கு பதிலடி கொடுக்கும் வகையில் 'ராஜீவ் காந்தியின் மரணம் படுகொலையா, விபத்தா?’ என மத்திய அமைச்சர் வி.கே. சிங் கேள்வியெழுப்பியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மத்தியப்பிரதேசம் மாநில முன்னாள் முதல்வருமான திக்விஜய் சிங் சமீபத்தில் புல்வாமா தாக்குதல் ஒரு விபத்து என கருத்து தெரிவித்தார். இந்த கருத்து பொதுமக்களிடையில் கொந்தளிப்பை உண்டாக்கியதுடன் அரசியல் வட்டாரத்திலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், திக்விஜய் சிங்கின் கருத்துக்கு வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ஜெனரல் வி.கே.சிங் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மரணம் படுகொலையா, விபத்தா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் உள்ள பாஜக தலைமையகத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வி.கே.சிங், 'பயங்கரவாதிகளின் தாக்குதலை பயங்கரவாத தாக்குதல் என்றே அழைக்க வேண்டும். உரிய மரியாதையுடன் நான் திக்விஜய் சிங்கிடம் கேட்கும் ஒரு கேள்விக்கு அவர் பதில் அளிக்கட்டும். அதன்பிறகு நீங்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் நாங்கள் பதிலளிக்கிறோம்.
உங்கள் தலைவர் ராஜீவ் காந்தியின் மரணம் படுகொலையா, விபத்தா?’ என்ற கேள்விக்கு முதலில் காங்கிரஸ் பதிலளிக்க வேண்டும்’ என தெரிவித்தார்.
பாகிஸ்தானின் பாலகோட் பகுதிக்குள் இந்திய விமானப்படைகள் நடத்திய தாக்குதலில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது தொடர்பாக மத்திய அரசின் சார்பில் சரியான விளக்கம் அளிக்கப்படாதது ஏன்? உரிய ஆதாரங்களை வெளியிடாதது ஏன்? என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிவரும் நிலையில் காங்கிரஸ் கட்சி விமர்சனத்திற்கு வி.கே.சிங் பதிலடி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.