கேரள மக்களுக்கு உதவுங்கள்; மோடியிடம் ராகுல் கோரிக்கை!
கேரள மாநிலம் வயநாட்டில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை வைத்துள்ளார்!
கேரள மாநிலம் வயநாட்டில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை வைத்துள்ளார்!
கேரளாவில் கடந்த சில வாரங்களாக தென்மேற்குப் பருவமழை தீவிரமாடைந்துள்ளது. இதனிடையே இந்திய வானிலை ஆய்வு மையம் கேரளாவில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. கடற்பரப்பு மோசமாக இருக்கும் எனவும் காற்றின் வேகம் அதிகரிக்கும் எனவும் இந்திய வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
கேரளாவின் இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் சிவப்பு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேவேளையில் திருசூர், பாலக்காடு, வயநாடு, கன்னூர் மற்றும் காசர்கோட் பகுதிகளுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.
முதல்வர் பினராயி விஜயன் வியாழக்கிழமை இரவு மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகளுடன் மாநிலத்தில் வெள்ள நிலைமை குறித்து ஆய்வு செய்தார். இதுவரை 22,165 பேர் பாதுகாப்புக்காக வெளியேற்றப்பட்டு மாநிலம் முழுவதும் உள்ள 315 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என முதல்வர் பினராயி தெரிவித்துள்ளார்.
பலத்த மழை காரணமாக கேரளாவின் கொச்சின் சர்வதேச விமான நிலையத்தின் நடவடிக்கைகள் வரும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மழையின் மத்தியில் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வயநாடு தொகுதி காங்கிரஸ் எம்.பி-யான ராகுல்காந்தி, "வயநாட்டில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். எனவே, மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு தேவையான உதவிகளை செய்ய வேண்டும்" என்று பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.