பாகிஸ்தான் தீவிரவாதிகளை உருவாக்குகிறது: ஐ.நா வில் சுஷ்மா
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐ.நா. பொதுச் சபையின் 72-வது கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷாஹித் ககான் அப்பாஸி வியாழக்கிழமை உரை நிகழ்த்தினார். அப்போது இந்தியா மீது குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் நேற்று உரையாற்றியபோது:-
பாகிஸ்தான், இந்தியா மீது தொடர்ந்து மறைமுகப் போரைத் தொடுத்து வருகிறது. உலகிலேயே மனிதத் தன்மையற்ற செயல்கள், இறப்பு, பதற்றம் ஆகியவற்றை பெரிய அளவில் ஏற்றுமதி செய்யும் அந்த நாடு, இந்த மேடையில் இருந்து மனிதாபிமானம் குறித்துப் பேசுவது முரணாக உள்ளது. அரசே பயங்கரவாதத்தை ஆதரிப்பது பாகிஸ்தானில் மட்டுமே சாத்தியம்.
பாகிஸ்தான் அரசியல் தலைவர்கள் இந்தியா மீது குறை கூறுவதற்குப் பதிலாக, தங்கள் நாட்டுக்குள் நடப்பதை கவனித்துப் பார்ப்பது புத்திசாலித்தனமாக இருக்கும்.
இந்தியாவும், பாகிஸ்தானும் அடுத்தடுத்த சில மணிநேரங்களில் சுதந்திரம் பெற்றன. எனினும், உலகளாவிய தகவல் தொழில்நுட்ப வல்லரசாக இந்தியா அங்கீகரிக்கப்பட்டுள்ளது ஏன்? என்பது குறித்தும், தங்கள் நாடு பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலையாக இருப்பது ஏன்? என்பது குறித்தும் பாகிஸ்தான் தலைவர்கள் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதத்தை எங்கள் நாட்டுக்கு ஏற்றுமதி செய்து வந்தபோதிலும் இந்தியா உயர்ந்து நிற்கிறது. இந்தியா சுதந்திரம் பெற்றதற்குப் பிந்தைய 70 ஆண்டு காலகட்டத்தில் பல்வேறு கட்சிகளின் தலைமையில் பல்வேறு அரசுகள் இருந்துள்ளன. அதனால் நாங்கள் நீடித்த ஜனநாயக சக்தியாகத் திகழ்கிறோம். ஒவ்வோர் அரசும் இந்தியாவின் வளர்ச்சிக்குப் பங்காற்றியுள்ளன.
ஐ.நா. வரலாற்றிலேயே பாகிஸ்தான் முதல் முறையாக இப்போதுதான் பதிலளிக்கும் உரிமையை நாடிப் பெற்றது. அப்போது மூன்று நாடுகளுக்கு (இந்தியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம்) அது பதிலளிக்க வேண்டியிருந்தது. அந்நாட்டின் தீய சதித்திட்டங்களை இது பிரதிபலிக்கவில்லையா? இந்தியா மீது குற்றச்சாட்டுகளை சுமத்தியதன் மூலம் பாகிஸ்தான் பிரதமர் தனது நேரத்தை வீணடித்து விட்டார்.
அவர் தனது உரையில் பழைய ஐ.நா. தீர்மானங்களைக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் முக்கியமான விஷயங்களை பாகிஸ்தான் பிரதமர் மறந்து விட்டார்.சிம்லா உடன்படிக்கை மற்றும் லாகூர் பிரகடனம் ஆகியவற்றின்படியே தங்களுக்கு இடையிலான அனைத்து முக்கிய பிரச்னைகளையும் இருதரப்பு ரீதியில் தீர்த்துக்கொள்ள இந்தியாவும் பாகிஸ்தானும் தீர்மானித்தன.ஆனால், பாகிஸ்தான் அரசியல் தலைவர்கள் அனைத்தையும் நினைவில் கொண்டுள்ளனர் என்பதும் தங்களது வசதிக்கு ஏற்ப ஞாபகங்களை திரித்துக் கூறுகின்றனர் என்பதும்தான் உண்மை. தங்கள் தரப்பு வாதத்தை சிதைக்கக் கூடிய உண்மைகளை மறைப்பதில் அவர்கள் வல்லவர்கள்.
சர்வதேச சமூகத்துக்கு அபாயம்: கடல்சார் பாதுகாப்பு மற்றும் அணு ஆயுதப் பரவல் ஆகியவை தொடர்ந்து கேள்விக்குறியான அம்சங்களாக நீடித்து வருகின்றன. உலகம் தற்போது பல்வேறு பிரச்னைகளில் சிக்கித் தவிக்கிறது. குறிப்பாக வன்முறை அதிகரித்து வருவது அபாயகரமானதாக உள்ளது.
பருவநிலை மாற்றம் மிகப்பெரிய சவாலாக உள்ளது. இந்தியா, சீனா போன்ற நாடுகள் பருவநிலை மாற்றம் தொடர்பான உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளபோதிலும் அமெரிக்கா இதிலிருந்து பின்வாங்கி விட்டது. பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் அபாயங்கள் குறித்து நாம் வெறுமனே பேசிக் கொண்டிருப்பதில் பயனில்லை. அதற்கான செயல்திட்டத்தை வகுக்க வேண்டும். வளர்ந்த நாடுகள் இதற்கான தொழில்நுட்பங்களை வளரும் நாடுகளுக்கு அளித்து உதவ வேண்டும் என்றார் சுஷ்மா.
ஐ.நா. சபையில் உலக நாடுகளின் தலைவர்களது கவனத்தை ஈர்க்கும் வகையில் சிறப்பாக உரையாற்றிய சுஷ்மா ஸ்வராஜுக்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் பாராட்டியுள்ளனர். இதற்காக பிரதமருக்கு சுஷ்மா நன்றி தெரிவித்துள்ளார்.
நாங்கள் ஐஐடி, ஐஐஎம் போன்ற அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிலையங்களை உருவாக்கியுள்ளோம். அவை உலகின் பெருமிதமாக விளங்குகின்றன. ஆனால் பாகிஸ்தான் தனது மக்களுக்கு உண்மையில் பயங்கரவாதத்தைத் தவிர வேறு எதை அளித்தது?
பாகிஸ்தான், பயங்கரவாதத்தை வளர்க்கச் செலவிடும் நிதியை தன்னாட்டின் வளர்ச்சிக்கு செலவிடுமானால் பாகிஸ்தானும், உலகமும் பாதுகாப்பாக இருக்கும். பாகிஸ்தான் உருவாக்கிய பயங்கரவாத அமைப்புகள் இந்தியாவுக்கு மட்டுமன்றி, அண்டை நாடுகளான ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகியவற்றுக்கும் அச்சுறுத்தலாக உள்ளன என்றார் அவர்.