கெஜ்ரிவாலின் போராட்டத்திற்கு அனுமதி தந்தது யார்? உயர்நீதிமன்றம் கேள்வி!
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் போராட்டத்திற்கு அனுமதி தந்தது யார்? என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது!
டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தான் செயல்படுத்தும் திட்டங்களை, மத்திய அரசு முடக்கி வருவதாக கூறி, கடந்த 8-நாட்களாக ஆளுநர் மாளிகையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருடன், சில அமைச்சர்களும் இந்த உள்ளிருப்பு போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இதையடுத்து, டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க வந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரள முதல்வர் பினராயி விஜயன், கர்நாடக முதல்வர் குமாரசாமி மற்றும் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நேரில் சென்று ஆதரவு அளித்துள்ளனர்.
இதற்கிடையே, கெஜ்ரிவால் போராட்டத்திற்கு எதிராகவும், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர கோரியும் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், கவர்னர் அலுவலகத்திற்குள் போராட்டம் நடத்துவதற்கு யார்? அனுமதி அளித்தது என்று கேள்வி எழுப்பியது.
இதற்கு பதில் அளித்து பேசிய டெல்லி அரசு வழக்கறிஞர், இது தனிநபர் முடிவு என்றார். வழக்கறிஞரின் இந்த பதிலால் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், இது போராட்டம் இல்லை. மற்றொருவரின் வீட்டிற்குள் அல்லது அலுவலகத்திற்குள் சென்று உங்களால் போராட்டம் நடத்த முடியாது என கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, இந்த மனுக்கள், மீதான அடுத்த கட்ட விசாரணை வரும் ஜூன் 22 ஆம் தேதி நடைபெற வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.