புது டெல்லி: டெல்லி வன்முறையை வழக்குகளை விசாரிக்கும் உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.முரளிதர், பஞ்சாப்-ஹரியானா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். நீதிபதி பணியிடமாற்றம் தொடர்பாக எதிர்க்கட்சி மத்திய அரசை குறிவைத்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதே நேரத்தில், இந்த இடமாற்றம் வழக்கமான ஒன்று தான் என விளக்கம் அளித்துள்ள மத்திய அரசு, காங்கிரஸ் வேண்டுமென்றே இந்த விவகாரத்தை அரசியல் பிரச்சினையாக மாற்றுகிறது என்று குற்றம் சாட்டியுள்ளது. 


டெல்லி வன்முறை சம்பவம் தொடர்பாக காவல்துறையினரையும், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவையும் கண்டித்த சில மணி நேரங்களுக்குள், சமூக வலைத்தளங்களில் பிரபலமான நீதிபதி முரளிதர் யார் என்பதை எங்களுக்குத் தெரியப்படுத்துகிறோம்.


டெல்லியில் தாண்டவம் ஆடிய வன்முறை சம்பவங்களை அடுத்து, தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லவும் தடை ஏற்படுகிறது. எனவே வன்முறையில் காயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அவர்களுக்கு சரியான பாதுகாப்பு வழங்க வேண்டும் என மனித உரிமை வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்திடம் கோரிக்கை வைத்ததை அடுத்து, அன்று இரவு 12.30 மணிக்கு உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.முரளிதர் வீட்டில் விசாரணை நடைபெற்றது. 


இந்த விசாரணை அடுத்து, தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களையும், காயம் அடைந்தவர்களையும் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பாதுகாப்பு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.


அதன் பின்னர், நீதிபதிகள் எஸ். முரளிதர் மற்றும் நீதிபதி தல்வந்த் சிங் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் நேற்று (புதன்கிழமை) பிற்பகல் உயர்நீதிமன்றத்தில் பாஜக தலைவர்களின் ஆத்திரமூட்டும் அறிக்கைகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்தது. 


விசாரணையின் போது, ​​நீதிபதி முரளிதர் தலைமையிலான பெஞ்ச், வன்முறையை தூண்டும் விதமாக பேசிய கபில் மிஸ்ரா உள்ளிட்ட தலைவர்கள் மீது டெல்லி காவல்துறையினர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கண்டித்தார். மேலும் அவர்கள் மீது FIR பதிவு செய்யவும் உத்தரவிட்டார். இதற்கிடையில், நீதிபதி எஸ். முரளிதர், "1984 -ல் நடந்த கலவரம் போல டெல்லி வன்முறை மாறிவிடக்கூடாது என்று நாங்கள் விரும்புகிறோம்" என்று கூறினார். 


இந்த வழக்கு நடந்த சில மணி நேரம் கழித்து அவர் பணியிடமாற்றம் செய்யப்பட்ட செய்தி வெளியானதும், இந்த விவகாரம் அரசியல் ஏற்றம் பெற வழிவகுத்தது.


நீதிபதி எஸ்.முரளிதர் யார்?
டெல்லி உயர்நீதிமன்ற வலைத்தளத்தின்படி, நீதிபதி முரளிதர் 1984 செப்டம்பரில் சென்னையில் வழக்கறிஞர் வாழ்க்கையை தொடங்கினார். 1987 ஆம் ஆண்டில், அவர் உச்ச நீதிமன்றத்திலும், டெல்லி உயர் நீதிமன்றத்திலும் பயிற்சி செய்யத் தொடங்கினார். முரளிதர் இரண்டு முறை உச்சநீதிமன்றத்தின் சட்ட சேவைக் குழுவின் உறுப்பினராக இருந்துள்ளார். எஸ்.முரளிதர் கட்டணம் வாங்காமல் பல வழக்கில் வாதாடியாவர். போபால் எரிவாயு வழக்கு மற்றும் நர்மதா அணை பாதிக்கப்பட்டவர்களின் வழக்குகளை கட்டணம் இல்லாமல் வாதாடினார்.


நீதிபதி முரளிதர் கடுமையான முடிவு எடுப்பவர்:
நீதிபதி முரளிதர் வழக்குகளில் அதிரடியான முடிவுகளை எடுப்பவர் என பெயர் பெற்றவர். 2009 ஆம் ஆண்டில் நாஸ் அறக்கட்டளை வழக்கில் டெல்லி உயர்நீதிமன்ற பெஞ்ச் விசாரணையில் நீதிபதி முரளிதர் இருந்தார். அப்பொழுது ஓரினச்சேர்க்கை குற்றம் இல்லை என்று தீர்ப்பு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.


1984 சீக்கிய கலவரம்: சஜ்ஜன் குமார் குற்றவாளி:
நீதிபதி முரளிதர் 2018 ஆம் ஆண்டில் பல முக்கிய வழக்குகளில் கடுமையான தீர்ப்புகளை வழங்கியுள்ளார். அதில் அவர் 1984 சீக்கிய கலவரத்தில் ஈடுபட்ட சஜ்ஜன்குமாருக்கு எதிராக தீர்ப்பளித்தார். அதே ஆண்டிலேயே, மாவோயிஸ்டுகள் தொடர்பான வழக்கில் கவுதம் நவலகா உள்ளிட்ட பல ஆர்வலர்களுக்கும் ஜாமீன் வழங்கினார்.


ஹாஷிம்புரா படுகொலையில் முன்னாள் போலீசார் தண்டிக்கப்பட்டனர்:
மேலும் 2018 ஆம் ஆண்டில், நீதிபதிகள் முரளிதர் மற்றும் நீதிபதி வினோத் கோயல் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், 1987 ஆம் ஆண்டு ஹாஷிம்புரா படுகொலை வழக்கில் யுபி பிஏசி சேர்ந்த முன்னால் 16 போலீஸ்காரர்களை கொலை, கடத்தல், கிரிமினல் சதி மற்றும் ஆதாரங்களை அழித்தல் ஆகியவற்றின் கீழ் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். அதேபோல கடந்த ஆண்டு, டெல்லியில் அரசு நிலத்தில் கட்டப்பட்ட தனியார் பள்ளிகளுக்கான கட்டணங்களை அதிகரிப்பதை தடை செய்ய நீதிபதி முரளிதரின் பெஞ்ச் தீர்ப்பு வழங்கியது.


பணியிடமாற்றத்தை வழக்கறிஞர்கள் எதிர்த்தனர்:
நீதிபதி எஸ்.முரளிதர் பணியிடமாற்றம் தொடர்பாகவும் கடந்த வாரம் கேள்விகள் எழுப்பப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வழக்கறிஞர்கள் பிப்ரவரி 20 அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் மற்றும் நீதிமன்றத்திலும் வழக்குகளில் ஆஜராகவில்லை. அவர் இடமாற்றத்தை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்ற பார் அசோசியேஷன் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியதுடன், உச்சநீதிமன்றத்தின் கொலீஜியத்தை எடுத்த முடிவு குறித்து அதிருப்தி தெரிவித்தது. பிப்ரவரி 12 ம் தேதி உச்சநீதிமன்றம் கொலீஜியம் நீதிபதி எஸ். முரளிதரை இடமாற்றம் செய்ய பரிந்துரைத்தது. இது தொடர்பாக அறிவிப்பு புதன்கிழமை வெளியிடப்பட்டது.