தமிழர்கள் ஏன் இந்தி பேச வேண்டும்?..சோனு நிகம் கேள்வி
நாட்டில் அதிகம் பேசப்படும் மொழி இந்தி என்றாலும், இந்தி மொழி பேசாத மக்கள் மீது அதனைத் திணிக்க முடியாது என பிரபல பின்னணிப் பாடகர் சோனு நிகம் கருத்துத் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் மற்றும் கன்னட நடிகர் சுதீப் இடையே ட்விட்டரில் கடந்த வாரம் நடைபெற்ற வாக்குவாதம் தேசிய அளவில் சர்ச்சையானது. இந்த விவகாரத்தில் சுதீப்பிற்கு ஆதரவாக ஒரு தரப்பினரும், அஜய் தேவ்கனுக்கு ஆதரவாக ஒரு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இவ்விவகாரம் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரபல பின்னணிப் பாடகர் சோனு நிகமிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், எனது அறிவுக்கு எட்டிய வரை, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இந்தி தேசிய மொழியாக எழுதப்படவில்லை. இது தொடர்பாக நிபுணர்களுடன் கலந்தாலோசித்தபோது, நாட்டில் அதிகம் பேசப்படும் மொழி இந்தி என்பதை நான் புரிந்துகொள்கிறேன்.
உலகின் மூத்த மொழி என்ன என்பது குறித்து சமஸ்கிருதத்திற்கும், தமிழுக்கும் இடையே விவாதம் நடக்கிறது. தமிழே தொன்மையான மொழி என அறிஞர்கள் கூறுகிறார்கள். ஏற்கனவே நாடு பல உள்நாட்டு பிரச்சனைகளை சந்தித்து வரும் வேளையில், இந்த சர்ச்சை தேவையற்ற பதற்றத்தை உருவாக்கும். நாட்டில் பிரச்சனைகள் குறைவாக இருக்கிறதா? தமிழர்களை இந்தி பேசக்கோரி, பிறர் மீது ஒரு மொழியை திணித்து நாட்டின் நல்லிணக்கத்தை குலைக்கிறோம்.
மக்கள் தாங்கள் பேச விரும்பும் மொழியை பேசுவதற்கான உரிமை இருக்கிறது. பஞ்சாப் மக்கள் பஞ்சாபி பேசட்டும். தமிழர்கள் தமிழ் பேசட்டும். அவர்களுக்கு வசதியாக இருந்தால் ஆங்கிலத்தில் பேசட்டும். நம் நீதிமன்றங்களில் கூட ஆங்கிலத்தில் தீர்ப்புகள் உள்ளன. விமானப் பணிப்பெண்களும் ஆங்கில மொழியையே விரும்புகிறார்கள் என்று கூறினார். அவரது பதிலைக் கேட்டு கூட்டத்தில் இருந்தவர்கள் பலத்த கரவொலி எழுப்பினர்.
பிரபல பின்னணிப் பாடகரான சோனு நிகம் தமிழ், இந்தி உட்பட 32 மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளது குறிப்பிடத் தக்கது.
மேலும் படிக்க | இந்தியை விரும்பாதவர்கள் அயல் நாட்டுக்கார்கள் - உ.பி அமைச்சர் திமிர் பேச்சு
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR