7 மாதங்களில் 1370 ஆய்வகங்கள்: Covid சோதனைகளில் இந்தியா துரித கதியில் முன்னேற்றம்!!
இந்தியாவின் கொரோனா வைரஸ் கோவிட் -19 சோதனை உள்கட்டமைப்பு, 2020 ஜனவரியில் ஒரே ஒரு ஆய்வகம் என்ற நிலையில் இருந்தது. அது துரித வேகத்தில் வளர்ந்து இப்போது 1370 ஆய்வகங்களாக அதிகரித்துள்ளது.
புதுடெல்லி: இந்தியாவின் கொரோனா வைரஸ் Covid-19 சோதனை உள்கட்டமைப்பு, 2020 ஜனவரியில் ஒரே ஒரு ஆய்வகம் என்ற நிலையில் இருந்தது. அது துரித வேகத்தில் வளர்ந்து இப்போது 1370 ஆய்வகங்களாக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 7, 2020) தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வியாழக்கிழமை, சோதனைக்கூடங்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், இந்தியாவால் சுமார் 2 கோடி COVID-19 சோதனைகளை வெற்றிகரமாக நடத்த முடிந்தது என்று தெரிவித்தது.
MoHFW ஒரு ட்வீட்டில் "#IndiaFightsCorona நமது சோதனை உள்கட்டமைப்பை ஜனவரி 2020 இல் ஒரு ஆய்வகம் என்ற நிலையில் துவக்கி தற்போது 1370 என்ற நிலையில் உள்ளோம். விரிவாக்கப்பட்ட கண்டறியும் ஆய்வக வலையமைப்பு மற்றும் நாடு முழுவதும் எளிதான சோதனைக்கான வசதி ஒரு ஊக்கத்தை அளித்துள்ளது. இந்தியா தற்போது 2 கோடி சோதனைகளை செய்துள்ளது.” என்று தெரிவித்தது.
தொற்றிலிருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டிருப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
"குணமடைபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவது, கண்காணிப்பு, கட்டுப்பாடு மற்றும் பயனுள்ள மருத்துவ மேலாண்மை ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் விளைவாகும். தொற்றை நிர்வகிக்க இந்தியா கோவிட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்ட மருத்துவமனைகளின் வலையமைப்பை உருவாக்கியது," என்று அறிக்கை கூறியது.
"பல நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் இறந்தவர்களின் வீதங்களும் மிகக் குறைவாகும்” என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வியாழக்கிழமை 56,282 பேர் புதிதாக COVID-19-ஆல் பாதிக்கப்பட்ட நிலையில், இந்தியாவின் COVID-19 எண்ணிக்கை 19,64,537 ஆனது. சிகிச்சையில் உள்ள நோயாளிகள் 5,95,501. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 13,28,336 ஆகும்.
904 இறப்புகளுடன் மொத்த இறப்பு எண்ணிக்கையை 40,699 ஆக உயர்ந்துள்ளது. கோவிட் -19 நோயாளிகளில் மீட்பு விகிதம் 67.62 சதவீதத்தை எட்டியுள்ளது என்றும், இறப்பு விகிதம் (சி.எஃப்.ஆர்) 2.07 சதவீதமாக உள்ளது என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ALSO READ: Good News! கொரோனா தடுப்பூசி முதல் கட்ட சோதனையில் வெற்றி.. நாளை முதல் 2-ம் கட்ட சோதனை
"குணமடைந்த COVID-19 நோயாளிகளின் எண்ணிக்கை 13,28,336 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 46,121 COVID-19 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் குணமடைந்து வருவதால், சிகிச்சையில் உள்ள நோயாளிகளுக்கும் குணமடைந்த நீயாளிகளுக்கும் உள்ள இடைவெளி 7,32,835 ஆகியுள்ளது” என்று அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் விகிதம் ஜூலை மாதம் 24 அன்று 34.17 சதவிகிதமாக இருந்தது. அது தற்போது 30.31 சதவீதமாகக் குறைந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் (Ministry Of Health) தெரிவித்துள்ளது.