மேற்கு வங்காளம் மாநில தலைநகர் கொல்கத்தா பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடியை, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இன்று மாலை சந்தித்துப் பேசினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இருநாள் பயணமாக மேற்கு வங்காளம் மாநில தலைநகரம் கொல்கத்தாவுக்கு பிரதமர் மோடி இன்று மாலை வருகை புரிந்தார். இந்த பயணத்தின் போது அவர் கொல்கத்தா துறைமுகத்தின் 150-வது ஆண்டுவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதற்கிடையே, கொல்கத்தாவுக்கு வருகை தந்த பிரதமர் மோடி ராஜ்பவனில் தங்கியுள்ளார்.


இந்நிலையில், ராஜ்பவனில் தங்கியுள்ள பிரதமர் மோடியை அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இன்று மாலை சந்தித்துப் பேசினார்.
 
அதன்பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு உள்ளிட்டவற்றுக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். எனவே அவற்றை கட்டாயம் திரும்ப பெறவேண்டும் என வலியுறுத்தியுள்ளோம் என தெரிவித்தார்.



மேலும், மத்திய அரசால் மாநிலத்திற்கு புல்பூல் சூறாவளியின் போது உறுதியளிக்கப்பட்ட ரூ.24 கோடி இழப்பீடு தொகையினை குறித்து அவர் பிரதமரிடம் பேசியதாகவும் தெரிவித்தார்.


கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவின் (42-ல் 18 இடங்களில் வெற்றி) வியத்தகு நிகழ்ச்சியின் பின்னர் வங்காளத்தில் முதன் முறையாக பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


முன்னதாக, மம்தா பானர்ஜி மத்தியில் ஆட்சி செய்து வரும் மோடி தலைமையிலான அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்தவர் மற்றும் CAA சுமத்தப்படுவதை எதிர்த்தவர் ஆவார். மேலும் மேற்கு வங்கத்தில் இந்த சட்டம் செயல்படுத்தப்படாது என்றும் பகிரங்கமாக அறிவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.