சபரிமலை சென்ற பிந்து அம்மினி மீது மிளகு தெளிப்பு தாக்குதல்...
கேரளாவின் சபரிமலை சன்னதிக்கு செல்ல மலையேற முயன்ற பெண் செயற்பாட்டாளர் பிந்து அம்மினி, எர்ணாகுளம் நகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வெளியே மிளகு தெளிப்பு (pepper spray) மூலம் தாக்கப்பட்டார்.
கேரளாவின் சபரிமலை சன்னதிக்கு செல்ல மலையேற முயன்ற பெண் செயற்பாட்டாளர் பிந்து அம்மினி, எர்ணாகுளம் நகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வெளியே மிளகு தெளிப்பு (pepper spray) மூலம் தாக்கப்பட்டார்.
இதுகுறித்து அம்மினி செய்திநிறுவனம் ANI-க்கு தெரிவிக்கையில்., "ஒரு நபர் மிளகாய் அல்லது மிளகு தெளிப்பினை (pepper spray) என் முகத்தில் தெளித்தார்," என தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்தாண்டு சபரிமலை சன்னதியில் பிரார்த்தனை செய்த இரண்டு பெண்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது மண்டல பூஜைக்காக சபரிமலை திறக்கப்பட்டுள்ள நிலையில், சபரிமலை சென்ற அம்மினியைக் கண்ட பக்தர்கள் தங்களது கோபத்தினை வெளிப்படுத்தும் விதமாக பிந்து மீது மிளகாய் தூள் தெளிப்பு வீசியுள்ளனர். ஒரு குறுகிய வாய்மொழி சண்டைக்குப் பிறகு, மருத்துவ உதவிக்காக கமிஷனர் அலுவலகத்திலிருந்து காவல்துறை அதிகாரிகளால் பிந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டதாகவும் செய்தி நிறுவனம் IANS குறிப்பிட்டுள்ளது.
சபரிமலை கோயிலுக்கு வருகை தரும் முயற்சியில் ஆர்வலர் துருப்தி தேசாயும் கொச்சியை அடைந்துள்ளார். அவரது வருகை ஐய்யப்ப பக்தர்களின் எதிர்ப்பைத் தூண்டியுள்ள நிலையில், அவர் கொச்சி நகர போலீஸ் கமிஷனர்கள் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் சபரிமலை செல்வதற்காக துருப்தி காவல்துறை உதவி நாடி அதிகாரிகளுடன் கலந்துரையாடி வருவதாக தெரிகிறது.
முன்னதாக தேசாய் கொச்சியில் இறங்கிய பின்னர் ANI-யிடம் தெரிவிக்கையில்., "அரசியலமைப்பு தினத்தன்று நாங்கள் இன்று சபரிமலை கோயிலுக்கு வருவோம். கோயிலுக்கு வருவதை மாநில அரசோ அல்லது காவல்துறையோ தடுக்க முடியாது. எங்களுக்கு பாதுகாப்பு கிடைத்தாலும் இல்லாவிட்டாலும் இன்று கோவிலுக்கு வருவோம்" என்று குறிப்பிட்டிருந்தார்.
முன்னதாக சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் 3:2 தீர்ப்பினை வழங்கியது. எனினும் இந்த வரலாற்று தீர்ப்பினை மறு ஆய்வு செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சபரிமலை தீர்ப்பு தொடர்பான இந்த மறுஆய்வு மனுவை ஒரு பெரிய (ஏழு நீதிபதிகள் கொண்ட) அமர்விற்கு உச்சநீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
சபரிமலை விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் விவாதித்து வரும் இந்நிலையில், தற்போது சபரிமலை கோவிலுக்கு பெண்களின் வரவு அதிகரித்து வருகிறது.
சபரிமலை பொருத்தவரையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இது கோவிலின் பாரம்பரியமாக பார்க்கப்படுகிறது. எனினும் கடந்தாண்டு உச்சநீதிமன்றத்தில் வெளியான தீர்ப்பு சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வழி வகுத்தது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினை மதிக்கும் வகையில் மாநிலத்தில் பினராயி தலைமையிலான அரசும் சபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு அளித்தது. எனினும் தற்போது சபரிமலை தொடர்பான தீர்ப்பு மறு சீராய்வுக்கு அனுப்பப்பட்டள்ள நிலையில் மகளிர் பிரவேசம் தற்போது தங்கள் சொந்த பாதுகாப்பில் இடம்பெற்று வருகிறது.
தற்போது சபரிமலை ஐயப்பன் கோவில் ஆனது மண்டல பூஜைக்காக கடந்த நவம்பர் 16-ஆம் தேதி துவங்கி இரண்டு மாத வருடாந்திர யாத்திரை காலத்திற்கு திறக்கப்பட்டுள்ளது. கோயில் அமைந்துள்ள பதனம்திட்டா மாவட்டத்தில் இறுக்கமான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.