புதுடெல்லி / லக்னோ: இப்போது உத்தரபிரதேச மாநிலம் முழுவதும் நமாஸ் பொது இடங்களில் படிக்கக்கூடாது என அறிவிக்கப்பட்டு உள்ளது. உ.பி.யில் பொது இடங்களில் நமாஸ் படிப்பதை அரசாங்கம் தடை செய்துள்ளது. அதே நேரத்தில், சாலைகளில் நமாஸ் படிக்கவும் தடை உள்ளது குறிப்பிடத்தக்கது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுபோன்ற எந்த நிகழ்வும் பொது இடங்களில் அனுமதிக்கப்படாது, இது மக்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது என்று டிஜிபி ஓ.பி.சிங் கூறினார். இந்த தடை உத்தரவு சமீபத்தில் மீரட் மற்றும் அலிகர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டது, இது இப்போது முழு மாநிலத்திலும் செயல்படுத்தப்படும்.


காவல்துறை பணிப்பாளர் (டிஜிபி) ஓ.பி. சிங் கூறுகையில், "சிறப்பு வழிபாடு மற்றும் விசேச தினங்களில் அதிக கூட்டம் இருக்கும்போது நமாஸ் படிக்க மாவட்ட நிர்வாகத்தால் அனுமதி அளிக்க முடியும். ஆனால் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பிரார்த்தனை செய்ய அனுமதி கொடுக்கப்படாது எனக் கூறினார்.


மேலும் சாலைகளில் நமாஸ் செய்யப்படாமல் இருக்க அனைத்து மாவட்ட காவல்துறை ஆய்வாளர் மற்றும் பிற அதிகாரிகளுக்கும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. 


சாலைகளில் நமாஸ் படிப்பதை தடைசெய்து அலிகார் மாவட்ட நிர்வாகம் முன்னர் விரிவான சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது, அதன் பின்னர் அது வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது என்று டிஜிபி கூறினார்.


சாலைகளில் நமாஸ் படிப்பதால் போக்குவரத்து எவ்வாறு பாதிக்கப்படுகிறது மற்றும் இன்னும் பிற பிரச்சினைகள் எழுகின்றன என்பதைக் குறித்து ஆலோசனை செய்ய மதகுருக்கள் மற்றும் மசூதி நிர்வாகிகளுடன் ஒரு சந்திப்பை நடத்த மாவட்ட அதிகாரிகளிடம் கேட்டுக் கொள்ளப்பட்டதாக டிஜிபி கூறினார். 


"கடந்த காலங்களில் கூட, சாலையை சீர்குலைத்து நமாஸ் படிக்க வேண்டாம் என்று நாங்கள் முஸ்லிம்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம் எனவும் கூறினார்.