உ.பி., முதல்வர்- யார் இந்த யோகி ஆதித்யநாத்?
உத்தரபிரதேச முதல் மந்திரியாக மடாதிபதி யோகி ஆதித்யநாத் தேர்வு செய்யப்பட்டார். லக்னோவில் இன்று அவர் பதவி ஏற்கிறார்.
நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த உத்தரபிரதேச மாநில சட்டசபை தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்று, ஆட்சியைக் கைப்பற்றியது.
லக்னோவில் உள்ள கன்ஷிராம் ஸ்மிரிதி உப்வானில் இன்று உத்தரபிரதேசத்தின் முதல் மந்திரியாக யோகி ஆதித்யநாத் பதவி ஏற்றுக்கொள்கிறார். அவருக்கும், துணை முதல் மந்திரிகள் கேசவ் பிரசாத் மவுரியா, தினேஷ் சர்மா மற்றும் மந்திரிகளுக்கும் கவர்னர் ராம்நாயக் பதவிப்பிரமாணமும், ரகசியகாப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.
இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பாஜக தலைவர் அமித் ஷா, பாஜக ஆளும் மாநில முதல் மந்திரிகள், மத்திய மந்திரிகள் கலந்து கொள்கிறார்கள்.
உத்தரபிரதேசத்தின் முதல் மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள யோகி ஆதித்யநாத், இன்றைய உத்தரகாண்ட் மாநிலம், பாஞ்சூரில் 1972-ம் ஆண்டு, ஜூன் மாதம் 5-ம் தேதி பிறந்தவர்.
இவரது இயற்பெயர் அஜய்சிங். எச்.என்.பி. கார்வால் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி. பட்டம் பெற்றவர். ராஜபுத்திர குடும்பத்தை சேர்ந்தவர். ‘இந்து யுவ வாஹினி’ என்ற சமூக, கலாசார அமைப்பை நிறுவி நடத்தி வந்தார். அத்துடன் கோரக்பூர் கோரக்நாத் மடத்தின் தலைவராகவும் இருந்து வந்தார்.
1998-ம் ஆண்டு தனது 26-வது வயதிலேயே கோரக்பூர் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி., ஆனவர். தொடர்ந்து 1999, 2004, 2009, 2014 தேர்தல்களிலும் வெற்றி பெற்று எம்.பி.,யாக உள்ளார்.