சர்ச்சையில் சிக்கியுள்ள முஸ்லீம் மதபோதகர் ஜாகீர் நாயக்கால் ஏற்படுத்தப்பட்ட இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளை என்ற தன்னார்வ அமைப்புக்கு கிடைக்கும் நிதியுதவி குறித்து மத்திய அரசு விசாரணை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமீபத்தில் டாக்காவில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் ஒருவன் மும்பையை சேர்ந்த இஸ்லாமிய மதபோதகர் ஜாகீர் நாயக்கின் பேச்சுக்களை சமூக வலைத்தளத்தில் பரப்பி இருந்தான். இதனால் ஜாகீர் நாயக்கின் வன்முறை பேச்சால் பயங்கரவாத தாக்குதலுக்கு தூண்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே அவரின் பேச்சை ஆய்வு செய்யுமாறு இந்தியாவை வங்காளதேச அரசு கேட்டுக் கொண்டது.  இதனை அடுத்து தற்போது வெளிநாட்டில் இருக்கும் ஜாகீர் நாயக்கின் பேச்சுகள் மற்றும் நிகழ்ச்சிகள் தொடர்பாக விசாரணை நடைப்பெற்று வருகிறது. 


இந்நிலையில் ஜாகீர் நாயக் நடத்திவரும் அரசு சாரா நிறுவனமான "இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளை"யின் நிதி பரிமாற்றம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் விசாரணை மேற்கொண்டு இருப்பதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 


மேலும் 2012-ஆம் ஆண்டுக்கு முந்தைய 5 ஆண்டு காலத்தில் ஜாகீர் நாயக்கின் அமைப்புக்கு ரூ.15 கோடி நிதியுதவி கிடைக்கப் பெற்றது குறித்தும் இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளைக்கு, பிரிட்டன், சவுதி மற்றும் சில கிழக்காசிய நாடுகளிலிருந்து தொடர்ந்து நிதி அளிக்கப்பட்டு வருவது குறித்தும் மத்திய உள்துறை அமைச்சகம் விசாரணை மேற்கொண்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.