இந்திய மக்கள் அனைவரும் இன்று (பிப்ரவரி 19) 3 மணிக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி: ஜீ மீடியா அழைப்பு
இந்தியா முழுவதும் பெரும் துயரம் மற்றும் பரபரப்பை ஏற்படுத்திய புல்வாமா தாக்குதலில் பலியான வீரர்களுக்கு இன்று நாட்டு மக்கள் அனைவரும் அஞ்சலி செலுத்த வேண்டும் என ஜீ மீடியா நெட்வொர்க் கேட்டுக்கொண்டு உள்ளது.
பிப்ரவரி 14 ஆம் தேதி ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநில புல்வாமா மாவட்டத்தின் அவந்திப்பூரா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 44 இந்திய ராணுவதுணைப்படை வீரர்கள் பலியாகினர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பையும், துயரத்தையும், வேதனையையும் ஏற்ப்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் பாகிஸ்தானுக்கு எதிராக கோஷங்கள் மற்றும் கண்டனங்கள் எழுந்துள்ளது. புல்வாமாவில் ஏற்பட்ட கொடூரமான தாக்குதலை நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாடு கோரி வருகிறது.
இந்தியா முழுவதும் தாக்குதலில் பலியான வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் பலியான வீரர்களின் குடும்பத்துக்கு பலர் உதவித்தொகையும் அளித்து வருகின்றனர்.
இந்தநிலையில், தாக்குதலில் வீரமரணம் அடைந்த தியாகிகளுக்கு மரியாதை செலுத்தவும், நாட்டு மக்கள் அவரது குடும்பங்களுடன் துணை நிற்கிறோம் என்ற ஒற்றுமையை வெளிப்படுத்தவும் இன்று (பிப்ரவரி 19) மூன்று மணிக்கு இரண்டு நிமிட மௌனம் காப்போம் என அனைத்து குடிமக்களுக்கும் ஜீ மீடியா கார்பரேஷன் லிமிடெட் அழைப்பு விடுத்துள்ளது.
எனவே நாட்டு மக்கள் அனைவரும் இன்று 3 மணிக்கு எங்கிருந்தாலும், எந்தவேளை செய்தாலும் நமக்காகவும், நாட்டுக்காகவும் வீரமரணம் அடைந்த வீரர்களுக்காக ஒரு இரண்டு நிமிடம் மவுனம் காப்போம். நமது ஒற்றுமையை காண்பிப்போம்.