கனிஷ்க் உரிமையாளர் பூபேஷ் குமார் அமலாக்கத்துறையால் கைது!
ரூ.824 கோடி மோசடி செய்ததாக கனிஷ்க் நிறுவன உரிமையாளர் பூபேஷ் குமார் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்!
ரூ.824 கோடி மோசடி செய்ததாக கனிஷ்க் நிறுவன உரிமையாளர் பூபேஷ் குமார் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்!
சென்னை உஸ்மான் சாலையில் இருக்கும் கனிஷ்க் என்ற பெயரில் இயங்கி வரும் தங்கம், வைரம், வைடூரியம், பிளாட்டின நகை கடையின் உரிமையாளர் பூபேஷ் குமார். சென்னை நுங்கம் பாக்கத்தில் தனது மனைவி நீட்டா ஜெயின் உடன் வசித்து வருகின்றார்.
SBI, PNB, HDFC, Bank of India உள்பட 14 வங்கிகளில் ரூ. 824 கோடி கடன் பெற்று மோசடி செய்திருப்பதாக கனிஷ்க் நிறுவனத்தின் மீது சம்பந்தப்பட்ட வங்கிகளின் கூட்டமைப்பு சார்பில் மத்திய புலனாய்வு துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரையிலான கணக்கில் லாபத்தையும், இருப்பையும் அதிகமாகக் காட்டி போலி நிதி அறிக்கை தயாரித்து வங்கிகளில் கடன் பெற்றுள்ளாதாக மத்திய புலனாய்வு விசாரணையில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
இதனையடுத்து வங்கி பாதுகாப்பு மற்றும் மோசடித் தடுப்பு பிரிவில் கனிஷ்க் நிறுவன உரிமையாளர் பூபேஷ்குமார், அவரது மனைவி, பங்குதாரர்கள் 3 பேர் உள்பட 5 பேர் மீது பெங்களூருவில் CBI வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் வங்கிகளில் பெற்ற கடனின் மூலம் வெவ்வேறு தொழில்களில் சட்டவிரோதமாக முதலீடு செய்ததாக விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், சென்னை அமலாக்கத் துறையினர் வழக்குப் பதிவு செய்து கனிஷ்க் நிறுவன உரிமையாளர் பூபேஷ் குமாரை இன்று கைது செய்தனர். பின்னர் நீதிபதியின் உத்தரவை அடுத்து, வரும் ஜூன் 8 வரை நீதிமன்றக் காவலில் பூபேஷ்குமார் ஜெயின் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.