காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கும் குமாரசாமிக்கு முதல்வர் பதவி..!
கர்நாடகாவில் பாஜக ஆட்சியமைப்பதை தடுக்க காங்கிரஸ் கட்சி முயற்சி செய்து வருகின்றது!
15:50 15-05-2018
கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைப்பதை தடுக்க மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு காங்கிரஸ் ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது. மேலும், குமாரசாமிக்கு முதலமைச்சர் பதவி விட்டுத்தரவும் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
15:13 15-05-2018
கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைப்பதை தடுக்க காங்கிரஸ் கட்சி வியூகம் அமைத்துள்ளது. முதல்வர் பதவியை குமாரசாமிக்கு விட்டுத்தர காங்கிரஸ் திட்டம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக கர்நாடக ஆளுநரை இன்று மாலை காங்கிரஸ் குழு சந்திக்கிறது.
கர்நாடகாவில் மே 12-ந் தேதி 222 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. இதுவரை இல்லாத வகையில் மிக அதிக அளவில் 72.13% வாக்குகள் பதிவாகி இருந்தன.
இந்த வாக்குகள் அனைத்தும் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. மாநிலம் முழுவதும் 38 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
பெங்களூருவில் மட்டும் 5 மையங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தற்போதைய நிலவரப்படி 106 தொகுதிகளில் பாஜகவும், 74 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் முன்னிலை பெற்றுள்ளன. மதச்சார்பற்ற ஜனதா தளம் 39 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.
தற்போது தேவையான 113 க்கும் அதிகமான இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது. அதிக தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கிறது. இதையடுத்து மீண்டும் கர்நாடகா முதலமைச்சராகிறார் எடியூரப்பா என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதையடுத்து, பெரும்பான்மை தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிப்பதால் ஆட்சி அமைக்கும் முனைப்பில் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
இந்நிலையில், கர்நாடகாவில் பாஜக ஆட்சியமைப்பதை தடுக்க காங்கிரஸ் கட்சி முயற்சி செய்து வருகின்றது.
இதையடுத்து, கர்நாடகாவில் மஜத ஆட்சியமைக்க ஆதரவு அளிப்பதாக கூறி ஆளுநருக்கு காங்கிரஸ் சார்பில் கடிதம் அனுப்பப்படவுள்ளது.
மேலும், கர்நாடகாவில் ஆட்சியமைப்பது தொடர்பாக 39 இடங்களிலும் முன்னிலை பெற்ற மதச்சார்பற்ற ஜனதா தள வேட்பாளர் ஜி.டி தேவகவுடாவுடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பேசி வருகின்றனர்.