எழும்பூர் கண் மருத்துவமனைக்கு 200 வயது! முழு விவரம் உள்ளே!
உலகின் 2-வது பழமையான மருத்துவ மையமான சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனை 200-வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது.
உலகின் 2-வது பழமையான மருத்துவ மையமான சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனை 200-வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் 1809-ம் ஆண்டு தொடங்கப்பட்ட மார்பீல்டு கண் ஆஸ்பத்திரிக்கு அடுத்தபடியாக 1819-ம் ஆண்டு சென்னை ராயப்பேட்டை ‘பழைய மெட்ராஸ் கிளப்’ அருகே டாக்டர் ராபர்ட் ரிச்சர்ட்சன் என்பவரால் கண் ஆஸ்பத்திரி தொடங்கப்பட்டது.
1844-ம் ஆண்டில் எழும்பூருக்கு இடம்மாற்றப்பட்ட இந்த மருத்துவமனை இன்று வரை சிறப்பான சேவை அளித்து வருகின்றது. 1948-ம் ஆண்டு இந்தியாவிலேயே முதன்முறையாக இந்த மருத்துவமனையில் தான் கண்வங்கி தொடங்கப்பட்டது. இந்த மருத்துவமனை நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் அரசு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
நாட்டிலேயே முதன் முதலாக, டாக்டர் எலியாட்ஸ் என்பவரால் இந்த மருத்துவமனையில் தான் கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது ஆண்டுக்கு 250 முதல் 300 கண் விழித்திரை மாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு பல ஏழை எளியோருக்கு கண்ணொளி வழங்கி வருகின்றது இந்த மருத்துவமனை.
எழும்பூர் அரசு கண் ஆஸ்பத்திரி உலகில் 2-வது பழமையான கண் மருத்துவமனையாகவும் ஆசியாவிலேயே முதல் தொன்மையான கண் ஆஸ்பத்திரி என்ற அந்தஸ்தையும் பெற்று உள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் 1850 முதல் 1920-ம் ஆண்டு வரை பணியாற்றிய டாக்டர்கள் எழுதிய மருத்துவ குறிப்புகளும், மருத்துவ உபகரண கருவிகளும் பொக்கிஷம் போல் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கண் மருத்துவர் மற்றும் மயக்கவியல் மருத்துவர்களை கொண்ட ஒரே மருத்துவமனை இது மட்டுமே. கண் அழுத்த நோய்க்கான உயர் சிகிச்சை அளிக்கும் ஒரே மருத்துவமனை என்ற பெருமையுடன் கடந்த 30 ஆண்டுகளில் 2 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு கண்புரை நீக்க அறுவை சிகிச்சை மேற்கொண்டு சரித்திர சாதனை படைத்துள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமானோர் சிகிச்சைக்காக இங்கு வருகிறார்கள்.
200-ம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் எழும்பூர் அரசு கண் மருத்துவமனைக்கு உலகின் முதல் பழமையான கண் மருத்துவமனையான ‘மார்பீல்டு’ நிர்வாகம் சார்பில் வாழ்த்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.