நிதி நெருக்கடியில் சிக்கி முடங்கிவிட்ட ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானங்கள் சிலவற்றை குத்தகைக்கு எடுக்க ஏர் இந்தியா திட்டமிட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்காக எஸ்பிஐ தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்த ஏர் இந்தியா தலைவர் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


விமான போக்குவரத்து துறையில் தனியார் நிறுவனங்களின் போட்டி மனப்பான்மை காரணமாக பயணிகளுக்கு ஆதரவாக சில நிறுவனங்கள் கட்டணங்களை குறைத்தும், சிறப்பு சலுகைகளை அறிவித்தும் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுத்தன. இந்த தொழில் போட்டியில் கிங் பிஷர் உள்ளிட்ட சில நிறுவனங்கள் கடுமையான இழப்பை சந்தித்தன. அவ்வகையில், தற்போது ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது.


இதன் காரணமாக வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து குத்தகை அடிப்படையில் வாங்கி இயக்கும் பல விமானங்களுக்கான வாடகை பாக்கியை செலுத்த முடியாமல் ஜெட் ஏர்வேஸ் நிர்வாகம் கடன் வைத்துள்ளது.  நூற்றுக்கும் அதிகமான விமானங்களை வைத்துள்ள ஜெட் ஏர்வேஸ் பல விமானங்களை இயக்காமலும் நிறுத்தி விட்டது. 


போதிய நிதி இல்லாததால் அந்நிறுவனத்தின் விமானிகள், பொறியாளர்கள் மற்றும் பணிப்பெண்களுக்கான மாத ஊதியத்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து குறிப்பிட்ட தேதியில் வழங்காமல் நிர்வாகம் இழுத்தடித்து வருகிறது.


சுமார் 8,000 கோடி ரூபாய் கடன் சுமையில் சிக்கித்தவிக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் திக்குமுக்காடி வருகிறது. மீண்டும் தலை நிமிரும் வகையில் புத்துயிர் அளிக்க 10,000 கோடி ரூபாய்வரை தேவைப்படுகிறது. இதற்கிடையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடந்த ஏப்ரல் 17-ஆம் நாள் முதல் தற்காலிகமாக அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது. வங்கியில் இருந்து கிடைக்க வேண்டிய தொகை உடனடியாக கிடைக்காததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.


எஸ்பிஐ தலைமையிலான நிர்வாக சீரமைப்பு குழுவும் ஜெட் ஏர்வேஸை மீட்க வழி கிடைக்காமல் தள்ளாடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஜெட் ஏர்வேஸின் பெரிய அகலமான அளவு கொண்ட விமானங்களைக் குத்தகைக்கு எடுக்க ஏர் இந்தியா முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.


ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திடம் 16 பெரிய அகலமான விமானங்கள் உள்ளன. அவற்றில் பத்து போயிங் 777-300ERs ரக விமானங்களும், ஆறு ஏர்பஸ் A330s ரக விமானங்களும் அடங்கும். இதில் ஐந்து போயிங் ரக விமானங்களை குத்தகை எடுக்க விரும்புவதாக ஏர் இந்தியா தலைவர் அஷ்வானி லொஹானி எஸ்பிஐ தலைவர் ரஜ்னிஷ் குமாருக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த விமானங்களை சர்வதேச பயண வழித்தடங்களில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 


ஏர் இந்தியா சர்வதேச வழித்தடங்களுக்கு விமான சேவைகள் வழங்குவதை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. ஆனால், ஏர் இந்தியாவிடம் போதுமான விமானங்கள் இல்லை. எனவே ஜெட் ஏர்வேஸ் விமானங்களைக் குத்தகை எடுப்பது உதவியாக இருக்கும் என்பதால் இந்த நடவடிக்கையை அவர் திட்டமிட்டுளதாக தெரிகிறது.