அப்துல்கலாம் நினைவு தினத்தையொட்டி, ராமேஸ்வரத்தில் உள்ள நினைவிடத்தில், அரசியல் தலைவர்கள், மாணவர்கள் அஞ்சலி..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் 4 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பு பகுதியில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவரும், விஞ்ஞானியுமான அப்துல் கலாமின் நினைவிடம் அமைந்துள்ளது. கலாமின் நினைவிடத்தில் மத்திய அரசு 20 கோடி ரூபாய் செலவில் மணிமண்டபம் அமைத்துள்ளது. அங்கு கலாமின் வாழ்க்கை வரலாறு, அவரது சாதனைகள் அடங்கிய பல புகைப்படங்கள், ஓவியங்கள், மற்றும் அவரது கண்டுபிடிப்புகளும் இடம் பெற்றுள்ளன.


மணி மண்டபத்தை காண இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர். கடந்த 2 ஆண்டு மட்டும் கலாமின் மணி மண்டபத்தை காண ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் வந்து சென்றதாக கூறப்படுகின்றது.


இந்நிலையில் அப்துல் கலாமின் 4ஆம் ஆண்டு நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. அவரது நினைவிடத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், விஞ்ஞானிகள் மரியாதை செலுத்தவுள்ளனர். அதைத்தொடர்ந்து அப்துல் கலாம் பவுண்டேஷன் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.


நிகழ்ச்சியில் அப்துல்கலாம் சமுதாய காடுகள் திட்டம் என்னும் திட்டத்தின் கீழ், ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் திட்டத்தை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று தொடங்கி வைக்க உள்ளார். நினைவு தினத்தையொட்டி கலாமின் நினைவிடம் மற்றும் மணிமண்டபம் அமைந்துள்ள பகுதியை அழகு படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவின் அரசியல் தலைவர்கள் அனைவரும் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் அஞ்சலியை செலுத்தியுள்ளனர்.