அரசு எடுத்த அதிரடி ஆக்சன்... இனி இந்த பொருளின் விலை ஏற வாய்ப்பு குறைவு!
Onion Export Duty: வெங்காயத்தின் விலை அதிகரிப்பு அச்சத்தின் மத்தியில் உள்நாட்டில் கிடைப்பதை அதிகரிக்க வெங்காயத்தின் மீது 40 சதவீத ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டுள்ளது.
Onion Export Duty: கடந்த சில நாள்களில் தக்காளியின் சாதனை படைக்கும் அளவிற்கு விலை உயர்ந்த நிலையில், வெங்காயத்தின் விலை எகிறவும் வாய்ப்பிருந்தது. இந்நிலையில், இந்தச் செய்தியைப் படித்தவுடன் உங்களுக்கு நிச்சயம் நிம்மதி கிடைக்கும். ஆம், வெங்காயத்தின் விலை உயரும் வாய்ப்பை கருத்தில் கொண்டு அரசாங்கம் ஒரு பெரிய நடவடிக்கையை எடுத்துள்ளது.
வெங்காயத்தின் விலை அதிகரிப்பு அச்சத்தின் மத்தியில் உள்நாட்டில் கிடைப்பதை அதிகரிக்க வெங்காயத்தின் மீது 40 சதவீத ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டுள்ளது. அரசாங்க தரவுகளின்படி, வெங்காயத்திற்கு முதல் முறையாக ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டுள்ளது.
டிச. 31ஆம் தேதி வரை
டெல்லியில் வெங்காயத்தின் சில்லறை விற்பனை விலை கிலோவுக்கு ரூ. 37 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்றுமதி வரி அறிவிப்பின் மூலம் 2023ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை வெங்காயத்திற்கு 40 சதவீத ஏற்றுமதி வரியை நிதி அமைச்சகம் விதித்துள்ளது. நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை நாட்டில் இருந்து 9.75 லட்சம் டன் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. மதிப்பின் அடிப்படையில், வங்கதேசம், மலேசியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் முதல் மூன்று இறக்குமதி நாடுகளாகும்.
மேலும் படிக்க | காசு மேல காசு வந்து கொட்டுற நேரமிது.. 10 ரூபாய் நோட்டுக்கு வந்த மவுசு
ஏற்றுமதி வேகமாக அதிகரித்தது
வரும் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு, உள்நாட்டு சந்தையில் வெங்காயம் கிடைப்பதை அதிகரிக்க வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீத வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார செயலாளர் ரோஹித் குமார் சிங் தெரிவித்துள்ளார். சிங் கூறுகையில், 'சமீப காலமாக ஏற்றுமதியில் விரைவான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதையும் காணமுடிகிறது. முன்னதாக, வெங்காயம் ஏற்றுமதியை கட்டுப்படுத்த குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை அரசு எப்போதும் பயன்படுத்தி வந்தது. எனினும், இந்த ஆண்டு முதல் முறையாக ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டுள்ளது' என்றார்.
நுகர்வோர் விவகார அமைச்சகத்தின் தரவுகளின்படி, தேசிய அளவில் வெங்காயத்தின் சராசரி சில்லறை விலை நேற்று ஒரு கிலோவுக்கு ரூ.30.72 ஆக இருந்தது. இந்த விலை அதிகபட்சமாக கிலோ ரூ.63 ஆகவும், குறைந்தபட்ச விலை கிலோ ரூ.10 ஆகவும் இருந்தது.
புள்ளிவிவரங்களின்படி, டெல்லியில் நேற்று வெங்காயத்தின் விலை கிலோவுக்கு ரூ.37 ஆக இருந்தது. நடப்பு காரீஃப் சீசனில், வெங்காயத்தின் பரப்பளவு குறைவதாகக் கூறப்படும் நிலையில், வெங்காயத்தின் விலை உயரத் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு 3 லட்சம் டன் வெங்காயத்தை அரசு கையிருப்பில் வைத்துள்ளது.
சமீபத்தில், தக்காளி விலையேற்றத்தை அடுத்து தற்போது வெங்காயத்தின் விலையும் உயரும் அபாயம் உள்ளது என தகவல்கள் வெளியாகின. தக்காளியின் விலை அதிகரித்ததால், மக்களை் அதனை சமாளிக்க முடியாமல் திணறி வரும் சூழலில், வரத்து இல்லாததால் வெங்காயத்தின் விலை இம்மாத இறுதிக்குள் சில்லறை சந்தையில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், தக்காளி விலை தற்போது குறைந்ததை அடுத்து, வெங்காயத்தின் விலை குறைய அரசு முன்னெடுத்துள்ள நடவடிக்கை இங்கு குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | வீட்டிலேயே பீட்ஸா செய்வது எப்படி..? சிம்பிள் ரெசிபி இதோ..!