சனி என்றாலே தீய கோள், தீய பலனை மட்டுமே தரும் என்பது போன்ற கருத்து நிலவுகிறது ஏன்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜோதிடத்தில் பெரிய அளவு நம்பிக்கை இல்லாதவர்கள் கூட சனிப்பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு - கேது பெயர்ச்சி என வரும் போது, அவற்றில் தங்களுடைய ராசிக்கு எப்படிப்பட்ட பலன்கள் உள்ளது என மிக ஆர்வமாக பார்ப்பது உண்டு. அதுமட்டுமல்லாமல் மற்ற கிரக பெயர்ச்சியை விட சனிப்பெயர்ச்சி வரும் போது சற்று பயத்துடன் தான் பார்க்கின்றனர். ஏனெனில் சனி கெடுதலை செய்வார் என பலர் கருதுகின்றனர். ஆனால் சனி கெடுப்பவர் அல்ல நல்லனவை கொடுப்பவரும் கூட. 


சனி என்றாலே எல்லோருக்கும் பயம் வருகிறதே ஏன்?... 


அசுப கிரஹங்களில் முதன்மையானது சனி என்பதால் இந்த பயம் வருகிறது. சனி என்றாலே தீய கோள், தீய பலனை மட்டுமே தரும் என்பது போன்ற கருத்து நிலவுகிறது. சோதனைகளை தந்து நமது முன்னேற்றத்திற்கு சனி தடையாக இருப்பார் என்று எண்ணுவதால் சனி என்ற வார்த்தையை உச்சரிப்பதற்கு, ஏன் காதால் கேட்பதற்குக் கூட அச்சம் கொள்கிறோம்.


உண்மையைச் சொன்னால் சனியின் மீதான இந்த பயம் அர்த்தமற்றது. சனி என்ற கோள் சாலையில் அமைக்கப்பட்டிருக்கும் ‘வேகத்தடை‘ போன்றது. வேகமாக சாலையில் பயணிக்கும் ஒருவருக்கு வேகத்தடையைக் கண்டதும் ஒருவித எரிச்சல் தோன்றும்.


நமது வேகத்தினை இது குறைத்து விட்டது என்று வருத்தம் கொள்வோம். ஆனால், நமது நலன் கருதியே அது அமைக்கப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். விபத்து ஏற்படாமல் நம் உயிரைக் காக்கும் உயரிய பணியை அந்த வேகத்தடை செய்கிறது.


வேகத்தடையைக் கண்டதும் நிதானித்து சென்றோமேயானால் நமது உயிர் காக்கப்படுகிறது. மாறாக அதனை மதிக்காமல் சென்றோமேயானால் விபத்து உண்டாகி சிரமம் ஏற்படுகிறது. சனியின் தாக்கம் அதிகரிக்கும்போது நிதானித்து செயல்பட வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டால் சனியைக் கண்டு அஞ்சத் தேவையில்லை.