பணிக்கொடை காலத்தை 5 ஆண்டில் இருந்து 3 ஆண்டாக குறைக்க மத்திய அரசு முடிவு
வேலைத்துறையில் லட்சக்கணக்கான ஊழியர்களுக்குப் பயனளிக்கக்கூடிய ஒரு நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு உள்ளது.
வேலைத் துறையில் லட்சக்கணக்கான ஊழியர்களுக்குப் பயனளிக்கக்கூடிய ஒரு நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு உள்ளது. அது கிராஜுட்டி (பணிக்கொடை) வழங்குவதற்கு சேவைகளின் காலத்தை குறைப்பதற்கான திட்டம் ஆகும். அது இந்த ஆண்டின் இறுதியில் நடைமுறைபடுத்தப்படும் எனத் தெரிகிறது.
பணிக்கொடை என்பது அரசு மற்றும் அரசு சார ஊழியர் ஓய்வின் போதோ அல்லது பணியில் இருக்கும் போது காலமானாலோ, குறிப்பிட்ட வருடத்திற்கு பிறகு வேலையில் இருந்து விலகும் போதோ, ஊழியருக்கு நிறுவனத்தால் வழங்கும் தொகை ஆகும். பணிக்கொடை ஊதியத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது. இத்தொகை கணக்கிடுவதற்கு ஊழியரின் தகுதியான பணிக்காலமும் அவர் ஓய்வுபெறும்போது பெற்ற ஊதியமும் அடிப்படைகளாகக் கொள்ளப்படுகிறது.
இந்த பணிக்கொடை சட்டம் 1972 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்த சட்டம் பத்து மற்றும் அதற்கு அதிகமானவர் பணியாற்றும் நிறுவனங்களுக்கு பொருந்தும். ஒரு நிறுவனத்தில் ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்தவர்களே பணிக்கொடை பெறுவதற்கு தகுதி பெற்றவர்கள் என இந்த சட்டத்தில் விதிமுறை உள்ளது.
இந்த விதிமுறையில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு ஆலோசனை செய்து வருகிறது. அதாவது ஐந்து ஆண்டுகள் என்பதை மூன்று ஆண்டுகளாக குறைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதுக்குறித்து ஜீ மீடியாவுக்கு கிடைத்த ஆதாரங்களின் படி, கிராஜுட்டி பெறுவதற்கு கால அவகாசத்தை குறைப்பதை குறித்து தொழிற்துறை அமைச்சகம், தொழில் நிறுவனங்கள் மற்றும் முதலாளிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர், இது தொடர்பான ஒரு முன்மொழிவு அறிக்கை மத்திய குழுவிற்கு அனுப்பிவைக்கப்படும். மேலும் ஒப்பந்த ஊழியர்களுக்கும் கிராஜுட்டி வழங்குவது குறித்து ஆலோசனை செய்யப்படும் என கூறப்பட்டு உள்ளது.