சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் ரஜினிகாந்த் 1950ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12ம் தேதியில் பிறந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கர்நாடக மாநிலத்தில் பிறந்த இவரது இயற்பெயர் சிவாஜி ராவ் கெய்க்வாட். இவருடைய பெற்றோர் ராமோசிராவ் கெய்க்வாட்-ராமாபாய் ஆவர். ஐந்து வயதான நிலையில் தனது தாயை இழந்த சிவாஜிராவ் பெங்களூரில் கல்வி பயின்றார். படித்து முடித்தவுடன் பெங்களூரில் பேருந்து நடத்துனராக பணியாற்றினார்.


நடிகராகும் ஆசையுடன் சென்னைக்கு வந்த ரஜினிகாந்த் சென்னை திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து பயின்றார். 1975-ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கிய ‘அபூர்வ ராகங்கள்’ என்ற படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார். இதன் பின்னர் மூன்று முடிச்சு என்ற படம் அவரை சிறந்த நடிகராக அடையாளம் காட்டியது.


அதன்பிறகு ‘16 வயதினிலே’, ‘காயத்ரி’ போன்ற படங்களில் வில்லனாக நடித்தார். அதன்பிறகு, நிறைய படங்களில் ஹீரோவாக நடிக்கத் தொடங்கினார். தனது 100-வது படமாக ஸ்ரீராகவேந்திர சுவாமிகளின் வாழ்க்கை பற்றிய காவிய படமான ‘ஸ்ரீராகவேந்திரா’ படத்தில் நடித்தார்.


1999-ஆம் ஆண்டு படையப்பா படத்திற்கு பிறகு சுமார் 3 ஆண்டுகள் படத்தில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். இதோடு சினிமாவில் இருந்து ஒதுங்கிவிடுவார் என்று நினைத்திருந்த வேளையில், பாபா என்ற படத்தில் நடித்தார்.


ரஜினி தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், வங்காளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் 154 திரைப்படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்தின் திரைப்படங்களுக்கு தமிழகத்தில் மாபெரும் வரவேற்பு கிடைக்கிறது. 


ரஜினிகாந்த் 1981-ம் வருடம் பிப்ரவரி 16-ந் தேதி லதாவை மணந்தார். இவர்களுக்கு ஐஸ்வர்யா, சௌந்தர்யா என இருமகள்கள் உள்ளனர். 


ரஜினி அரசியல் களத்தில் நுழைவது எப்போது என்ற கேள்வி எழத்தொடங்கியது. தொடர்ந்து திரைப்பணிகளை கவனித்து வந்த அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் சிறிது காலம் ஓய்வெடுக்கும் கட்டாயத்திற்கு ஆளானார். தமிழ்த்திரை ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற ரஜினி அதன் பின்னர் தனித்துவமிக்க கதைகளைத் தேர்ந்தெடுத்து வழங்கினார். அதோடு அரசியல் களத்திற்கு வருவது உறுதி என்றும் அறிவித்தார். அதன் பின்னர் தனது ரசிகர் மன்றங்களை, மக்கள் மன்றமாக மாற்றிய ரஜினி, அந்தப் பணிகளிலும் தனக்கே உரிய தனித்துவத்துடன் செயலாற்றி வருகிறார். ஒரு கலைஞனாக திரைத்துறையில் வெற்றி பெற்ற ரஜினி, மனைவி மற்றும் மகள்கள் எடுத்துக் கொண்ட துறைகளில் வெற்றி பெற துணை நின்றார்.