சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண்களின் சிறப்புக் குறித்தும், மகளிர் தினத்தின் வரலாறு குறித்தும் தற்போது காண்போம்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலகின் அதிசயம் மனித இனம்  என்றால் பிரபஞ்சத்தின் அதிசயம் பெண் இனம். மென்மையும், வலிமையும் ஒருங்கே காணப்படும் ஒரு படைப்பு. என்ன தான் படைப்பில் அனைவரும் சமம் என்றாலும் பெரும்பாலான உலக சமூகம் அவளுக்கு சமமான இடத்தை வழங்கவில்லை. ஆனால் சமூகம் அவளுக்கு சமமான இடத்தை  வழங்கினாலும், வழங்காவிட்டாலும் அவளுக்கு ஆணை விட உயர்ந்த இடத்தையே இயற்க்கை வழங்கி உள்ளது.
 
ஒரு தாய் தந்தையருக்கு ஒரே நேரத்தில் பிறக்கும்  இரட்டை குழந்தைகளுக்கு, தாய் தந்தையரால் ஒரே மாதிரி வாழ்க்கை தரத்தை வழங்கி விட முடியும். ஆனால், ஒரே மாதிரி வாழ்க்கை சூழலை வழங்க முடியாது. குழந்தை பருவத்தில் பெண் குழந்தைகள் தங்களின் குடும்ப சூழலுக்கு ஏற்ப அல்லது சமூக சூழலுக்கு ஏற்ப வளர்க்கப் படுகிறார்கள், அல்லது வளர்கிறார்கள். 


சில குடும்பங்கள் தங்கள் பெண் குழந்தைகளை எந்த தெருவில்,எந்த  ஊரில், அல்லது எந்த நாட்டில் இருந்தாலும் இப்படித்தான் வளர வேண்டும் என்ற நியதிகளுடன் வளர்க்கிறார்கள். ஆனால், சில குடும்பங்கள் வாழ்க்கைக்கு தேவையான நியதிகளை மட்டும் கற்றுக் கொடுத்துவிட்டு அன்றைய சமூக சூழலுக்கு ஏற்ப பெண் குழந்தைகள் வளர விடுகிறார்கள். அந்த பெண் குழந்தைகள் சூழலுக்கு ஏற்ப அறிவை ,உணர்வை பிரதிபலிக்கும் சுதந்திரத்துடன் வளர்க்கிறார்கள்.


இரண்டுமே வளர்ச்சிதான். இரண்டுமே  பெண்ணின் சிறப்பை பறை சாற்றும்  வாய்ப்பை தர வல்லதே. நியதிக்கு மாறாக வேறுபட்ட பாதையில் பயணம் செய்யும் ஒரு சதவீத பெண்களை விட்டு விடுவோம். உலகத்திற்கும், குடும்பத்திற்கும், பெரும்பாலான பெண்கள் நன்மையே  செய்வார்கள்.


தொண்ணூற்றி ஒன்பது சதவீத பெண்கள் முதல் பாதியில் கற்றுக் கொண்டபடி வளர்ந்தாலும், கற்றுக் கொடுத்தபடி வளர்ந்தாலும், வாழக்கையில் பிற்பகுதியில் அவர்கள் தன்னை சுற்றி உள்ள சூழலை நிர்ணயிக்கும் சக்தியாக மாறுகிறார்கள்.  


அன்பை பொழிந்து அந்த சூழலையே அன்பு நிறைந்ததாக மாற்றுவதானாலும், திறமை நிறைந்த சூழலில் தன்  திறமையை ஜொலிக்க செய்வதாக இருக்கட்டும், பிறரின் திறமையை பட்டை தீட்டுவதாக இருக்கட்டும், அச்சம் நிறைந்தவர்களுக்கு தைரியம் தருவதானாலும், தெளிவான எண்ணங்களை பரவ செய்வதாக இருந்தாலும், இப்படி, அறிவு, கல்வி, ஆரோக்கியம், ரசனை நற்சிந்தனை,  தொலை நோக்குப் பார்வை என பலப்பல உணர்வுகள் கலந்த சூழலை உருவாக்க வல்லவள் பெண்.


ஒரு மழையோ, புயலோ, வெயிலோ, காற்றோ எதுவும் நம் கட்டுப்பாட்டில் இல்லை. ஏனெனில், அது இயற்கை, அதனுடன் இயைந்துதான் வாழ வேண்டும். அதை மாற்ற முடியாது. அதுபோலவே பெண்ணும் ஒரு இயற்க்கை சக்தி. ஒரு பெண்ணால் சூழலை தன் அன்பு மழையால் செழிக்க செய்யவும், கோபப் புயலால் சுழற்றி எடுக்கவும், வெறுப்பின் நெருப்பால் தகிக்க செய்யவும், கல்வி அறிவால் சிறக்க செய்யவும்,  கருணையின் நிழலில் வாழ வைக்கவும் முடியும். பெண் இயற்கை சக்தியை ஒத்த குணாதிசயங்கள் கொண்ட ஒரு ஒப்பற்ற பிறவி.


முதல் பாதியில் சூழலை ஒட்டி கற்றுக் கொண்டவள், பிற்பாதியில் சுற்றுப்புறத்தின்  சூழலையே உருவாக்கும் சக்தியாக மாறி விடுகிறாள்.   மகளிரால் இந்த உலகம் மகிழ்ச்சியாக இருக்கிறது. மகளிரால் இந்த உலகின் உயிர்கள் போற்றி வளர்க்கப் பட்டுள்ளன, போற்றி வளர்க்கப் படுகின்றன. ஒருவரின்  குடும்பத்தின் உணர்வு மயமான சூழல்   பெரும்பாலும் ஒரு பெண்ணால்தான் நிர்ணையிக்கப் படுகிறது.  


எனவே, பெண்ணுக்கு உரிய  உரிமைகளும் மரியாதையும் தரப்படுவதுதான் தர்மமாகும். ஆதலால் "மகளிர் போற்ற விரும்பு" என்பது எந்த சூழலுக்கும் பொருந்தும்..!