ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவில் சேவைக் கட்டணம் வசூலிக்கப்படும் வழக்கம் நாளை(செப் 1) முதல் நடைமுறைக்கு வருகிறது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவில் சேவைக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் படி சாதாரண வகுப்புக்கு ரூ.15, ஏசி வகுப்புக்கு ரூ.30 கட்டணம் வசூல் செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சேவை கட்டணத்துடன் ஜி.எஸ்.டி வரியும் தனியே வசூலிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 


பொதுவாக ரயிலில் பயணம் செய்வதற்கான டிக்கெட்டை, IRCTC இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். முன்னதாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, அந்த இணையதளம் வாயிலாக, ரயிலில் தூங்கும் வசதி டிக்கெட் முன்பதிவுக்கு ரூ.20–ம், ஏ.சி. வசதி ரெயில் டிக்கெட்டுக்கு ரூ.40–ம் சேவை வரியாக வசூலிக்கப்பட்டது.


பின்னர் 'டிஜிட்டல்' முறையிலான பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், IRCTC இணையதளத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய சேவை கட்டணம் வசூலிப்பது ரத்து செய்யப்பட்டது. இதனால், IRCTC நிறுவனத்திற்கு இணையதள டிக்கெட் முன்பதிவு வாயிலாக கிடைத்த வருவாய் 26 சதவீதம் குறைந்தது. 


இந்த சேவை கட்டணம் ரத்து மூலம் ரயில்வே துறைக்கு ஆண்டுதோறும் ரூ.500 கோடி வரை இழப்பு ஏற்படுகிறது. இதனால் இ-டிக்கெட்டுகளுக்கு மீண்டும் சேவை கட்டணம் விதிக்கலாமா என ரயில்வே வாரியத்துக்கு, IRCTC கடிதம் எழுதியிருந்தது. 


இது குறித்து நிதித்துறை அமைச்சகத்திடம் ரயில்வே வாரியம் ஆலோசித்தது. ‘‘சேவை கட்டணம் ரத்து எனபது தற்காலிக நடவடிக்கைதான். எனவே, இ-டிக்கெட்டுகளுக்கு ரயில்வே அமைச்சகம் மீண்டும் சேவை கட்டணம் விதிக்கலாம்’’ என கூறியது. இதையடுத்து இ-டிக்கெட்டுகளுக்கு மீண்டும் சேவை கட்டணம் விதிக்க IRCTC-க்கு, ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. 


அந்த வகையில் தற்போது மீண்டும், இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகளில், ஏசி அல்லாத வகுப்புகளுக்கு ஒரு டிக்கெட்டுக்கு ரூ.15 மற்றும் முதல் வகுப்பு உட்பட ஏசி வகுப்புகளுக்கு ரூ.30 சேவை வரி வசூளிக்கும் வழக்கம் நடைமுறைக்கு வருகிறது. இந்த வழக்கம் ஆனது நாளை (செப்டம்பர் 1) முதல் நடைமுறைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.