முகநூளில் தனது தாயாரின் மறுதிருமணம் குறித்த கேரள மாணவர் ஒருவரின் பதிவு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேரள மாநிலத்தின் கொல்லம் நகரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவரின் உணர்ச்சிப்பூர்வமான ஃபேஸ்புக் பதிவு மனங்களை வென்றதுடன் என்னற்றோரின் வாழ்த்துக்களினாலும், பாராட்டு மழையினாலும் நனைந்து வருகிறது. கோட்டயம் நகரைச் சேர்ந்த கோகுல் ஸ்ரீதர் என்ற மாணவர் அங்குள்ள கல்லூரி ஒன்றில் பயின்று வருகிறார். இந்திய மாணவர் கூட்டமைப்பின் செயலாளராக இருந்து வரும் இவர் நேற்று தனது முகநூல் பக்கத்தில் தனது தாயாரின் மறுமணம் குறித்து பதிவு செய்துள்ளார்.


அந்த பதிவை, ‘எனது தாயின் மறுமணம்’ என்று தலைப்பிட்டு முகநூளில் பதிவிட்டுள்ளார். அத்துடன் அவர், தனது தாயார் மற்றும் தனது புதிய தந்தையின் புகைப்படத்தை பதிவிட்டு, அதன் கீழ் “சந்தேகம், அவநம்பிக்கை, வெறுப்புணர்வுடன் யாரும் இந்த பதிவை அணுக வேண்டாம், இது எந்த வகையிலும் எங்களை இழிவுபடுத்தாது.


இந்த பெண்மணி அவரது வாழ்கையை எனக்காக வாழ்ந்தவர், அவரது வாழ்க்கையில் பெரும் துயரங்களை அனுபவித்தார். அதன் ஒரு கட்டத்தில் ஒரு முறை அவரது தலையில் இருந்து ரத்தம் சொட்டிக்கொண்டிருந்தது, அப்போது அவரை பார்த்து, ஏன் இன்னமும் இந்த உறவை தொடர்ந்து கொண்டிருக்கிறீர்கள் எனக் கேட்டேன். தற்போதும் அவரது பதில் எனது நினைவில் உள்ளது, நான் உனக்காக வாழ்கிறேன், அதற்காக இந்த கஷ்டங்களை பொறுத்துக்கொள்வேன் என்றார்.


அந்த நாள் அவரது கையை பிடித்துக்கொண்டு அந்த வீட்டை விட்டு வெளியேறிய போது இப்படி ஒரு தருணம் வர வேண்டும் என எண்ணினேன். எனது தாயாருக்கு திருமண வாழ்த்துக்கள். இதனை நான் யாரிடமும் இருந்தும் மறைக்க விரும்பவில்லை. தனது இளமைகாலத்தை எனக்காக தியாகம் செய்தவர் எனது அம்மா, அவர் மென்மேலும் உயரங்களுக்கு சென்று அவரது கனவை நனவாக்கட்டும்” என முகநூளில் பதிவிட்டுள்ளார். 



இந்த உணர்ச்சிவசமான பதிவினை அவர் நேற்று பதிவிட்ட பின்னர் 33,000க்கும் மேற்பட்டவர்கள் அதனை விருப்பம் (like) செய்ததும், 3000க்கும் மேற்பட்டோர் ஷேர் செய்ததையும் தாண்டி பல்வேறு தரப்பினரும் அந்த இளைஞருக்கு தங்களது மனமார்ந்த பாராட்டுகளையும் தங்கள் வாழ்த்தினையும் பகிர்ந்து வருகின்றனர்.


இரண்டாம் திருமணம் செய்வதையே இழிவு என கருதும் சமூக சூழலில் தனது தாயின் இரண்டாவது திருமணம் குறித்து மாணவர் பொதுவெளியில் பகிர்ந்துள்ளதை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.