கடந்த ஆண்டு ஜனவரி 1, புத்தாண்டு தொடங்கியபோது கூட, யாரும் இதை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், இன்று ஓராண்டு தாண்டிய சரித்திரம் அது. தமிழர்களின் தன்மானம் காக்கும் மறவர்களாக, இளைஞர்கள் சென்னை மெரினாவில் களம் இறங்கி தொடங்கி வைத்த அறவழி போராட்டம் ஈட்டிய வெற்றி, பொன் எழுத்துகளில் பொறிக்க வேண்டிய வரலாறு அல்லாமல் வேறு என்ன? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வரலாற்றுக் கதையைப் பின்னணியாகக் கொண்டு அஹிம்சா புரொடக்ஷன்ஸ் சார்பில், உருவாகியிருக்கும் "ஜல்லிக்கட்டு 5-23, 2017" திரைப்படத்தின் 2வது பாடல், சிறப்பு மிக்க ஹார்ட்வேர்ட் பல்கலைக்கழகத்தில் வெளியிடப்பட்டது. அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் அமைந்துள்ள கலைமகளின் அந்த தலைக்கோவிலில் - அல்ட்ரிச் ஹாலில், "நீ தான் தமிழன்" எனத் தொடங்கிய அப்பாடல்  வெளியிடப்பட்டது. 


தமிழகத்தில் எக்காரணம் கொண்டும் ஜல்லிக்கட்டை கைவிடக் கூடாது என, அதைத் தக்கவைக்க தொடர்ந்து முயற்சி செய்து வரும் காங்கேயம் காளை ஆராய்ச்சி மைய நிறுவனர் கார்த்திகேயன் சிவசேனாபதி இந்த 2ம் பாடலை முறைப்படி வெளியிட்டார். 


இதை இந்திய தலைநகர் டில்லியின் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா மற்றும் முன்னணி ஆடை வடிவமைப்பாளர் சபையாச்சி முகர்ஜியுடன், இணை தயாரிப்பாளரான குரு சரவணன் ஆகியோரும் சேர்ந்து பெற்றுக் கொண்டனர். படத்தின் இயக்குனரான சந்தோஷ் கோபாலும் அப்போது உடனிருந்தார். 


அதையொட்டி, அப்பல்கலைக் கழக மாணவர்கள், அங்கே ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டுள்ளோர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பலர் இருக்க திரைப்படத்தின் சிறப்பு காட்சிகளும் பாடலும் திரையிடப்பட்டது. ரமேஷ் வினாயகம் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் 2வது பாடல், பிரபல பாடகர் ஹரிச்சரண் குரலில் ஒலித்தது. 


நிருபமா தலைமையிலான அஹிம்சா புரொடக்ஷன்ஸ் சார்பில், ஜெயபால் நடேசன், குரு சரவணன் மற்றும் கணபதி முருகேஷ் இணை தயாரிப்பில், சந்தோஷ் கோபாலின் இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படம் தமிழில் முதல்முறையாக ஹாலிவுட்டின் பல நுட்பங்களை காட்சிக்கு வைக்கப் போகும் முன்னோடி திரைப்படம் என்பது படக்குழுவின் கருத்து.