புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தும் பேஸ்புக்
90 நாட்களுக்கு மேல் பழமையான கட்டுரை ஒன்றை பகிரும்போது, அது குறித்து பயனர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் புதிய அம்சத்தை பேஸ்புக் அறிமுகப்படுத்துகிறது.
வாஷிங்டன்: பிரபல சமூக ஊடகமான பேஸ்புக் தனது சேவையில் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்துகிறது. 90 நாட்களுக்கு மேல் பழமையான கட்டுரை ஒன்றை பகிரும்போது, அது குறித்து பயனர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும். வலைப்பதிவு இடுகையில் பேஸ்புக் இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பதாக The Verge என்ற செய்தி வலைதளம் செய்தி வெளியிட்டிருக்கிறது.
பேஸ்புக்கில் பகிரப்படும் உள்ளடக்கமானது, சரியான நேரத்தில் வெளியிடப்படுவதாகவும், அதிக நம்பகத்தன்மையுடனும் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்படுகிறது.
இருந்தபோதிலும், 90 நாட்கள் கடந்த பிறகும், அந்த குறிப்பிட உள்ளடக்கமானது அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைத்தால், செய்தியை பயனர் தொடர்ந்து பகிரலாம்.
ஏனென்றால், தற்போது மிகவும் பழைய செய்தி கட்டுரைகள் கூட, சில சமயங்களில் தற்போதைய செய்திகளைப் போலவே பகிரப்படுவதால் சிலபல பிரச்சனைகளும், குழப்பங்களும் ஏற்படுகிறது.
Also Read | $800 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களை அழித்த மியான்மர்
இந்த சிக்கலை தீர்ப்பதற்காகவும், இதுபோன்ற கவலைகள் ஏற்படாமல் இருக்க வேண்டுமென்பதால் புதிய அம்சம் உருவாக்கப்பட்டுள்ளதாக பேஸ்புக் கூறுகிறது. மேலும், "தற்போதைய நிகழ்வுகளின் நிலையை தவறாகப் புரிந்து கொள்வதற்கான வாய்ப்புகளை தவிர்ப்பதற்கான முயற்சி இது" என்றும் பேஸ்புக் கூறுகிறது.
இந்த முன்முயற்சியின்படி, பேஸ்புக் தனது தளத்தில், ஒரு புதிய அறிவிப்புத் திரையை அறிமுகப்படுத்தும். இது பயனர்கள் பகிர்ந்து கொள்ளவிருக்கும் கட்டுரை 90 நாட்களுக்கு மேல் இருந்தால், அதுகுறித்த எச்சரிக்கை விடுக்கும் என்று வியாழக்கிழமையன்று பேஸ்புக் நிறுவனம் அறிவித்தது.
"உலகளவில் ஒரு அறிவிப்புத் திரையை வெளியிடத் தொடங்குகிறோம், இது பயனர்கள் பகிரவிருக்கும் செய்தி கட்டுரைகள் 90 நாட்களுக்கு மேல் இருக்கும்போது, அந்தத் தகவலை மக்களுக்குத் தெரிவிக்கும்" என்று வலைப்பதிவு இடுகை (blog post) ஒன்றில் பேஸ்புக் குறிப்பிட்டுள்ளது.
Also Read | நன்னடைத்தையால் தண்டனை காலத்திற்கு முன்னதாக விடுவிக்கப்படுகிறாரா சசிகலா?
சமூக ஊடக தளமான பேஸ்புக், இதற்கு முன்னதாக, 2018 ஆம் ஆண்டில் செய்தி ஊட்டத்தில் (News Feed) உள்ள கட்டுரைகளின் ஆதாரங்களைப் பற்றிய தகவல்களை வழங்கும் சூழல் பொத்தானை (context button)ஐ அறிமுகப்படுத்தியது. இதன் மூலம், பயனர்கள் ஒரு தகவலின் அல்லது கட்டுரை வெளியிடப்பட்ட காலம்,நேரத்தைப் பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.
பேஸ்புக்கில் எதைப் பகிர வேண்டும் என்பது குறித்து தகவலறிந்த முடிவுகளை எடுக்க வேண்டிய சூழல் மக்களுக்கு இருப்பதை உறுதிசெய்ய, 90 நாட்களுக்கு மேல் உள்ள கட்டுரைகளில் share button மக்கள் கிளிக் செய்யும் போது அறிவிப்புத் திரை தோன்றும். ஆனால் அந்தக் கட்டுரையை தற்போதைய சூழலுக்கும் ஏற்றதாக இருப்பதாக பயனர் தீர்மானித்தால் மக்கள் தொடர்ந்து பகிர்வதற்கு அனுமதிக்கும் என்பதால் இது கூடுதல் பாதுகாப்பு என்ற நோக்கத்திற்காகவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு கட்டுரையின் சூழலைப் புரிந்துகொள்வதிலும், தவறான தகவல்கள் பரவுவதைத் தடுப்பதிலும் செய்தியின் நேரமானது முக்கிய பங்காற்றுவதால் இந்த பாதுகாப்பு நடவடிக்கை அவசியமானது என்று பேஸ்புக் கூறுகிறது.