இனி ATM-களில் 9 மணிக்கு மேல் பணம் நிரப்பப்படாது!
அடுத்த ஆண்டில் இருந்து ஏ.டி.எம் இயந்திரங்களில் பணம் நிரப்பும் பணிகள் மாலை மற்றும் இரவு நேரங்களில் நிறுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அடுத்த ஆண்டில் இருந்து ஏ.டி.எம் இயந்திரங்களில் பணம் நிரப்பும் பணிகள் மாலை மற்றும் இரவு நேரங்களில் நிறுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு காரணம் கருதி இனி ATM இயந்திரங்களில் இரவு 9 மணிக்கு மேல் பணம் நிரப்பக் கூடாது என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. கிராமப்புறங்களில் மாலை 6 மணியோடும், நக்சலைட்டுகள் தாக்குதலுக்கு ஆளான பகுதிகளில் மாலை 4 மணியோடும் ஏ.டி.எம்-களில் பணம் நிரப்பும் பணிகள் முடிக்கப்பட வேண்டும் என கெடு விதிக்கப்பட்டுள்ளது.
ATM இயந்திரங்களில் பணம் நிரப்ப செல்லும் வாகனங்களுக்கு ஆயுதம் ஏந்திய காவலர்கள் கட்டாயம் பாதுகாப்பு தர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள பல வங்கிகள், ATM இயந்திரங்களில் பணம் நிரப்பும் பணிகளுக்காக தனியார் பாதுகாப்பு நிறுவனங்களை நம்பியுள்ளன. இதுபோன்ற நிறுவனங்கள் மொத்தம் 8000 வாகனங்களை இந்த பணிகளுக்காக உபயோகப்படுத்தி வருகின்றன. இவர்கள் மூலம் தினம் ரூ.15,000 கோடி மாற்றப்படுகிறது.
வாகனங்களிலோ, இதுபோன்ற பாதுகாப்பு நிறுவனங்களின் அலுவலகங்களிலோ நடைபெறும் திருட்டு சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. அதை தடுக்கும் பொருட்டு இந்த புதிய விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் இந்த திட்டம் அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்..!