ரயிலில் லக்கேஜை தொலைத்த பயணிக்கு... ரூ. 4.7 லட்சம் இழப்பீடு - ரயில்வேயில் இப்படி ஒரு ரூல்ஸ் இருக்கா?
Indian Railways: ரயில் பயணத்தின்போது லக்கேஜை தொலைத்த பயணிக்கு, ரூ.4.7 லட்சத்தை இழப்பீடாக வழங்க ரயில்வே துறைக்கு, தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன் பின்னணியை இங்கு காணலாம்.
Indian Railways: தினந்தோறும் இந்தியன் ரயில்வேயில் கோடிக்கணக்கான பயணிகள் நாடு முழுவதும் பயணிக்கிறார்கள் எனலாம். அவர்களுக்கான ஆயிரக்கணக்கான ரயில்கள் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் தினமும் சென்று வருகிறது. பயணிகளின் வசதியையும், தேவையையும் அடிப்படையாக வைத்து ரயில்வே துறை தற்போது வரை வெற்றிகரமாக இயங்கி வருகிறது. கடந்த சில மாதங்களாக அதிக ரயில் நடந்தாலும் இன்றும் ரயிலே பல மக்களின் பயணத்திற்கு முதல் தேர்வாக இருக்கிறது. அந்தளவிற்கு ரயில் மேல் மக்களிடம் இன்றளவும் நம்பகத்தன்மை குறையாமல் இருக்கிறது.
ரயிலில் மக்கள் சில நேரம் சில அசௌகரியங்களையும் சந்திப்பார்கள். ஆயிரக்கணக்கானோர் ஒரே ரயிலில், ஒரே ரயில் நிலையத்தில் சென்று வருவதால் எண்ணிலடங்கா அசௌகரியங்களை சிலர் சந்திக்கலாம். அதுவும் ரயிலிலும், ரயில் நிலையங்களிலும் நடைபெறும் திருட்டுச் சம்பவங்களாலும் மக்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் எனலாம். திருட்டுச் சம்பவங்கள் பல பயணிகளின் தூக்கத்தை கெடுக்கின்றன எனவும் கூறலாம். இப்போதெல்லாம் ரயிலிலும், ரயில் நிலையங்களிலும் காவல்துறை பாதுகாப்பு என்பது அதிகரித்துவிட்டது.
ரூ. 4.7 லட்சம் இழப்பீடு...!
இருந்தாலும் திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது போல் திருடர்களும் திருடுவதற்கு புது புது வழியை கண்டுபிடித்துக்கொண்டேதான் இருப்பார்கள். இப்போதெல்லாம் நகை, பணம் ஆகியவற்றை விட செல்போன், லேப்டாப் போன்ற விலை உயர்ந்த எலக்ட்ரானிக்ஸ் பொருள்களை திருடுவதையும் பலரும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். ரயிலில் நடைபெறும் இதுபோன்ற திருட்டுச் சம்பவத்திற்கு பொறுப்பேற்று ரயில்வே துறை இழப்பீடு வழங்குமா என பலருக்கும் சந்தேகம் இருக்கிறது.
அந்த வகையில், ரயிலில் தனது பேக்கை தொலைத்த பயணி ஒருவர், தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் முறையிட்ட நிலையில், ரயில்வே துறை அவருக்கு ரூ.4.7 லட்சத்தை இழப்பீடு வழங்க வேண்டும் என ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்தும், இதன் பின்னணியில் உள்ள விதிமுறைகள் குறித்தும் இங்கு விரிவாக காணலாம்.
மேலும் படிக்க | ரயில் டிக்கெட் முன்பதிவு விதிமுறையில் மிகப்பெரிய மாற்றம், நவம்பர் 1 முதல் அமல்
பயணியின் சட்ட போராட்டம்
2007ஆம் ஆண்டு சத்தீஸ்கர் மாநிலத்தின் துர்க் நகரை சேர்ந்த திலிப் சதுர்வேதி என்பவர் மத்திய பிரதேசத்தின் கட்னியில் இருந்து சத்தீஸ்கர் துர்க் நகருக்கு செல்லும் ரயிலில், படுக்கை வசதி கொண்ட பெட்டியில் பயணித்துள்ளார். அவர் பயணித்த போது தன்னுடன் 9.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் அடங்கிய தனது லக்கேஜை தொலைத்துவிட்டார். அதாவது, இரவு 2.30 மணிக்கு தூங்கிக்கொண்டிருக்கும்போது தனது லக்கேஜ் தொலைந்துவிட்டதை அவர் கண்டறிந்துள்ளார். இதை தொடர்ந்து அவர் துர்க் மாவட்ட நுகர்வோர் ஆணையத்தில் புகார் அளித்தார்.
இதில் தென் கிழக்கு மத்திய ரயில்வே அவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என மாவட்ட நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டது. ஆனால் துர்க் மற்றும் பிலாஸ்பூர் ரயில் நிலைய பொறுப்பாளர் இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீட்டுக்குச் சென்றனர். திலீப் சதுர்வேதி தொடர்ந்து தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்திடம் முறையிட்டார். அதில் திலீப் சதுர்வேதி தெரிவித்த புகார்தான் முக்கியமான ஒன்று.
டிக்கெட் பரிசோதகரின் அலட்சியத்தால்தான், முன்பதிவு செய்யாத நபர்கள் அந்த ரயில் பெட்டியை ஆக்கிரமித்திருந்ததாகவும், இதனால்தான் திருட்டு நடந்ததாகவும் கூறினார். தனது லக்கேஜ் சங்கிலியால் கட்டிவைக்கப்பட்டிருந்தன என்றும், அதன் பாதுகாப்பிற்காக தான் முழு தயாரிப்புகளையும் செய்திருந்ததாகவும் அவர் கூறினார். ஆனால், டிக்கெட் பரிசோதகரின் அலட்சியத்தால், லக்கேஜ்கள் திருடப்பட்டுவிட்டது என்றும் இந்த வழக்கில் ரயில்வே சட்டத்தின் பிரிவு 100 பொருந்தாது என்றும் வாதாடினார். இதனை ஏற்றுக்கொண்ட தேசிய நுகர்வோர் ஆணையம் 4.7 லட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்க ரயில்வே துறைக்கு உத்தரவிட்டது.
ரயில்வே ரூல்ஸ் என்ன?
அதாவது, திருடப்பட்ட லக்கேஜ்களுக்கு இழப்பீடு வழங்க இந்திய ரயில்வே சில விதிகளை வகுத்துள்ளது. ரயில்வே சட்டத்தின் 100வது பிரிவின் கீழ், ரயில்வே ஊழியர் லக்கேஜை முன்பதிவு செய்து, ரசீதை பயணிகளுக்கு வழங்காத வரை, இந்திய ரயில்வே எந்த லக்கேஜுக்கும் பொறுப்பாகாது. அந்த லக்கேஜ் பயணிகளின் பொறுப்புதான். பயணியின் லக்கேஜ் ரயில்வே துறையின் அலட்சியத்தால் தவறினாலோ, சேதமானாலோ, திருடப்பட்டாலோ ரயில்வேதான் தார்மீக பொறுப்பேற்க நேரிடும். இதில் ரயில்வே சட்டத்தின் 100ஆவது பிரிவு செல்லுபடி ஆகாது.
மேலும் படிக்க | தடைகளை தாண்டி திருப்பதி செல்ல வீட்டில் செய்ய வேண்டிய வழிபாடு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ